பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

சங்கமம் ஆகமுடியும். உடைக்க முடியாத, விலக்க இயலாத உணர்வுக் கலப்புத் தான் அந்த அற்புத சங்கமம். மாணகன் மனத்தில் தன்னை அடைக்கலம் செய்துகொண்ட பதுமையும் அப்போது இதே நிலையில் இதே உறுதியோடுதான் இருந்தாள். திகைப்போடு அதை வெல்ல வேண்டிய திடமும் அவளிடம் இருந்தது. ஆனால் மாணகனும் உதயணனும் ஒருவர்தான் என்பதை அவள் அதுவரை அறிந்துகொள்வதற்கு இயலவில்லை.

தருசக வேந்தனால் அனுப்பப் பெற்ற அமைச்சன், தக்க நேரமறிந்து உதயணனைச் சந்தித்து வணங்கினான். உதயணன் அமைச்சனுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு அவனைத் தன் எதிரிலிருந்த ஆசனத்தில் அமரச் செய்தான். அப்போது உதயணன் தோழராகிய வயந்தகன் முதலியோரும் அங்கே வந்து அமர்ந்து கொண்டனர். வந்த அமைச்சனுடைய முகக் குறிப்பிலிருந்து அவன் ஏதோ முக்கியமான ஒன்றைப் பற்றிப் பேசிச் செல்வதற்கு வந்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் உதயணன். கூற வந்த செய்தியைச் சொல்லத் தொடங்கலாம் என்ற கருத்துப் பொதிந்த பார்வை ஒன்றை அமைச்சனை நோக்கி உதயணன் செலுத்தினான்.

அமைச்சனுக்கும் அந்தப் பார்வை புரிந்திருக்க வேண்டும். அவன் தான் வந்த காரியத்தைப் பற்றிப் பவ்வியமான முறையில் உதயணனிடம் பேச்சை ஆரம்பித்தான். “வத்தவர் பேரரசே! எம்மரசன் தருசகன் என்பாற் கூறி அனுப்பிய செய்தி இது! ‘உலகைச் சூழ்ந்து வேலியிட்டுள்ள கடல் தன் வரம்பு கடந்து பொங்கி நிலை தளருமேயானால் உலகத்தோடு மட்டுமின்றி அதிலடங்கிய வானளாவிய மலைகளையும் தன்னுள் ஆழ்த்தி அடக்கிக் கொண்டு விடும். உலகத்தைக் காத்து அரசாளும் மன்னனும் தன் சொந்த வாழ்க்கையில் இன்ப துன்பப் பேருணர்வுகளில் சிக்கி உழலும் நிலை நேரிடுமாயின், அவனால் காக்கப்படும் உலகமும் கலக்கம் அடைய வேண்டியதாகும். வாசவதத்தையை இழந்து