பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உதயணன் சம்மதம்

253

கூறிவிட உதயணனுக்கு விருப்பமில்லை. வருத்தந்தோய்த குரலில் அமைச்சனை நோக்கிப் பேசினான் அவன். “விருப்பத்தோடு காதலித்து மணந்துகொண்ட பிரச்சோதன மன்னனின் மகள் தத்தையை நெருப்புசூழ மாய்ந்து போகும்படி பறிகொடுத்தேன்! ஆருயிர் நண்பன் யூகியையும் இழந்தேன்! இப்படியெல்லாம் தாங்க முடியாத துன்பங்களை நான் அடைந்த பின்னும், உயிரைத் தாங்கிக் கொண்டு வாழ்கின்றேன். இப்படி நடைப்பிணமாக நான் வாழ்வதில் பொருளே இல்லை. என்னுடைய நெஞ்சுரம்தான் என்னை இன்னும் துணிந்து வாழச் செய்து கொண்டிருக்கிறது. தத்தைக்குப் பின்னால் வேறொருவரிடம் என் அன்பைச் செலுத்த முடியாதவனாக இருக்கிறேன் நான்! உங்கள் அரசரின் வேண்டுகோள்படி பதுமையை மணஞ்செய்து கொள்ள நான் துணிவேனானால் உலகம் என்னை இகழ்ந்து பழிக்காமல் விடாது. ‘தத்தையும் யூகியும் இறந்த பின்பு அவர்களுக்காகச் சிறிதளவும் சிறிது காலமும் மனம் நோகாமல் நான் மட்டும் இன்ப வாழ்வு வாழ விரும்புகிறேன்’ என்று உலகம் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு பேசும். எனவே, உங்கள் மன்னர் கூறும் கருத்திற்கு இசைய முடியாத நிலையில் நான் இருக்கிறேன்” என்று இவ்வாறு போலித் துயரத்தை உட்கொண்டு நடிப்புக் குரலில் உதயணன் அமைச்சனுக்கு மறுமொழி தந்தான்.

தன்னைத் தேடித் தருசகனிடமிருந்து வந்திருக்கும் அமைச்சனின் மனக்கருத்தை ஆழம் பார்ப்பதற்காக உதயணன் நடித்த இந்த நடிப்பை அமைச்சன் உண்மை என்றே நம்பினான். எவ்வகையிலாயினும் உதயணனைச் சம்மதிக்கச் செய்துவிட வேண்டும் என்ற அழுத்தமான எண்ணத்துடன் உதயணனுக்கு ஆறுதல் கூறி இசைவு பெறும் முயற்சியில் அவன் இறங்கினான். பின்பு சிறிது நேரம் கழித்து, அவனது அந்த முயற்சிக்காகக் கட்டுப்பட்டு மறுக்க முடியாத நிலையில் வேண்டா வெறுப்பாகச் சம்மதிப்பவன் போல மனம் நெகிழ்ந்து இசைவு தெரிவித்தான் உதயணன்.