பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மனம் பறிகொடுத்திருக்கும் பதுமையின் நெஞ்சம் என்ன பாடுபடும்? மாணகனும், உதயணனும் ஒருவரே என்பது பதுமைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நம் நண்பர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாத உண்மை ஆயிற்றே அது? அப்படி இருக்கும்போது பதுமை அதை எவ்வாறு அறிந்திருக்க இயலும்? உதயணனிடம் பதுமைக்கு மதிப்பு இருக்கலாம். ஆனால், அவள் உள்ளம் மாணகன் ஒருவனுக்கு மட்டும் தானே உரிமை உடையது? நானே மாணகனாக அவளிடம் நடித்தேன் என்ற உண்மையை அவள் தெரிந்து கொள்ளுமாறு செய்வது எப்படி? இந்த மறைவான உண்மையைப் பதுமை அறிந்து கொள்ளவில்லையானால் அவளுக்கும் காதலில் வெற்றியில்லை; எனக்கும் தோல்விதான்! இதை அவளுக்கு அறிவிப்பதற்கு வேறு வழியும் இருப்பதாகத் தெரியவில்லையே? என்ன செய்யலாம்?” என்று இவ்வாறு நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான் உதயணன்.

‘தானே மாணகனாக இருந்தவன் என்பதைப் பதுமைக்கு யாரால் எப்படி அறிவித்து அவளுடைய மனக் கலக்கத்தைப் போக்குவது?’ என்று மிகுந்த நேரம் இதே சிந்தனையில் ஆழ்ந்து கிடந்ததன் பயனாக இறுதியில் உதயணனுக்கு ஒரு வழி புலப்பட்டது. அவன் தனக்குள் ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவனாக, வயந்தகனை அழைத்துவரச் செய்தான். சிறிது நேரத்தில் வயந்தகன் உதயணனிடம் வந்தான். வயந்தகனைத் தனக்கு மிக அருகில் வருமாறு உதயணன் குறிப்புச் செய்து விட்டு, அவனிடம் கூறத் தொடங்கினான். “வயந்தகா! இப்போது முக்கியமான ஒரு காரிய நிமித்தம் உன்னை அழைத்திருக்கிறேன். எனக்காக நீ தருசகராசனிடம் சென்று இப்போது நான் கூறியனுப்புவதைச் சொல்லிவிட்டு வர வேண்டும்! இப்போது நான் அகப்பட்டுக் கொண்டிருக்கும் விநோதமான இன்னல் ஒன்றிலிருந்து தப்ப வேண்டுமானால், தருசகனிடம் உன்னை நான் எதற்காக அனுப்புகின்றேனோ அந்தக் காரியம் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி உன்