பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இசைச்சன் திருமணம்

259

இரண்டு திருமணச் செய்திகளையும் கேட்டு அளப்பரிய உவகை கொண்டாள் பெற்றவள். “பதுமைக்கு உதயணன் முற்றிலும் தகுதி வாய்ந்தவன்தான். அது அவளுக்கு ஒரு நல்ல பாக்கியம் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றாள் தாய். தருசகனும் தாயாரும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கும் போது தற்செயலாகப் பதுமாபதியும் அங்கே வந்து சேர்ந்தாள். பதுமையின் தாய், யாப்பியாயினியின் திருமணத்திற்காக என்று தன்னிடமிருந்து சில அணிகலன்களை எடுத்துக் கொடுத்தாள். தருசகன் அவற்றைப் பெற்றுக் கொண்டான். அப்போதும் அதன் பின்பும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட பேச்சிலிருந்து அருகில் அமர்ந்திருந்த பதுமைக்கு, இசைச்சனுக்கும் யாப்பியாயினிக்கும் திருமணம் நிகழப் போகிறது என்ற செய்தி தெரிந்தது.

பதுமைக்குத் துயரம் தாங்க முடியவில்லை. ‘காதலித்த மாணகனைக் காணாமல் தான் தவிக்கும்போது, உதயணனை மணப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். மாணகனும் நானும் உள்ளம் ஒத்த காதலர்கள் என்ற உண்மை என் தோழியருள் யாப்பியாயினி ஒருத்திக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அவளைக் கொண்ட மாணகனைத் தேடிக் காணலாம் என்ற நினைவினால் இதுவரை ஆறுதல் பெற்று வந்தேன். இனிமேல் அதுவும் முடியாதுபோல் இருக்கிறதே? யாப்பியாயினியைத் திருமணம் செய்து கொடுத்து என்னிடத்திலிருந்து பிரிப்பதற்கு அல்லவா இவர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள். இனி நான் சிறகு ஒடிந்த பறவைபோல் அன்றோ ஆகிவிடுவேன்?’ என்ற எண்ண அலைகளிலிருந்து மீள இயலாத சஞ்சலத்தோடு, தமையனிடமும் தாயிடமும் விடைபெற்றுக்கொண்டு யாப்பியாயினியைச் சந்திக்கச் சென்றாள் பதுமை. தனக்குத் திருமணம் என்ற பேச்சு இதற்குள் எவ்வாறோ அவளுக்கும் தெரிந்திருந்தது. பதுமை யாப்பியாயினியைக் கண்டு முதலில் களிப்புக்குரிய பேச்சுக்களைப் பேசி விட்டுத் தன் அன்பளிப்பாக அவளுக்குச் சில பரிசில்களைக் கொடுத்தாள். பின் “திருமணமானால் என்னைப்பற்றி உனக்கு எங்கே நினைவு இருக்கப்போகிறது?