பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

னுடைய முகச்சாயலோடு இப்போது கண்ணெதிரே காணும் உதயணனை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள் அவள். உண்மை அவளுக்கும் புரிந்தது. ‘உதயணனும் மாணகனும் ஒருவரே’ என்பதை அவள் அறிந்துகொண்டாள். நெஞ்சங்கள் உறவுகொண்டு காதலிக்கும்போது அந்த உறவு இயற்கையாகவே எவ்வகையிலும் ஒத்த இரண்டிடங்களிலேயே ஏற்படுகிறது. ‘பதுமையை மாணகனாக மாறி இருந்து காதலித்தவன் உதயணனே’ என்று அறிந்துகொண்ட பின் இந்த ஒற்றுமை இயல்பை எண்ணிப் பார்த்தாள் யாப்பியாயினி. வியப்புக்குரிய இந்த உண்மையை விரைவாகப் பதுமைக்குக் கூறி அவளை மகிழ்விக்க வேண்டும் என்றும் ஆர்வமுற்றாள் அவள். ‘பதுமை! நீ காதலித்த அந்தண இளைஞன் மாணகன், உண்மையில் யார் என்று தெரியுமோ உனக்கு? அவன்தான் உதயணன். நீ கொடுத்து வைத்தவள்! எல்லா வகையிலும் சிறந்த பேரரசனாகிய உதயணனை உன் காதலனாகக் கொண்டுவந்து சேர்த்த விதியை அதற்காக வாழ்த்தத்தான் வேண்டும்’ என்று அப்போதே பதுமையைத் தனியே அழைத்துச் சென்று கூறவேண்டும் என்ற ஆசைத் துடிப்பை எய்தினாள் யாப்பியாயினி. அவள் அறிந்துகொண்ட உண்மை அத்தகையதாகவே இருந்தது.

ஆனால், ‘உதயணனே மாணகன், என்ற செய்தியைப் பதுமைக்குச் சொல்ல வேண்டும்’ என்று யாப்பியாயினி கொண்ட ஆர்வத்தை, ஏழு நாள்கள் அடக்கிக் கொள்ள வேண்டியதாகப் போயிற்று. திருமண நிகழ்ச்சிக்கு உரிய ஏழு நாள்களிலும் யாப்பியாயினி, பதுமையைச் சந்திக்கவே முடியவில்லை. எட்டாவது நாள் காலையில் பதுமையே யாப்பியாயினியைக் காணும் விருப்பத்தோடு அவளை அழைத்துக் கொண்டு வருமாறு சிவிகையையும் ஆட்களையும் அனுப்பிவிட்டாள். யாப்பியாயினியை அதுவரை முழுமையாக ஒரு நாள் கூடப் பிரிந்து தனிமையுறாத பதுமைக்கு அந்த ஏழு நாள் பிரிவு, ஏழாண்டுப் பிரிவுபோல இருந்தது. யாப்பியாயினி புதுமணக் கோலத்தின் அழகுப் பொலிவோடு, ஆர்வமும்