பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமையின் பாக்கியம்

263

முந்திடச் சிவிகை ஏறிப் பதுமையைக் காண்பதற்கு வந்தாள். சந்தித்த உடனேயே, தான் அறிந்துகொண்டிருந்த உண்மையைப் பதுமைக்கு மகிழ்ச்சியோடு கூறினாள் அவள். பதுமையும் அவளும் ஒருவரை யொருவர் தழுவிக் கொண்டனர். “பதுமை! காமன் கோட்டத்தில் மாணகன் என்னும் அந்தண இளைஞனாக மாறுவேடங்கொண்டு உன் உள்ளத்தைக் கவர்ந்த காதலன் வேறு யாறுமில்லை! உதயணனேதான். இனி நீ கவலையுறுவதைத் தவிர்க” என்றாள் யாப்பியாயினி.

அவள் கூறியதைக் கேட்டதும் பதுமையின் கண்கள் வியப்பால் மலர்ந்தன. அந்த மலர்ச்சி நிலைத்த நேரம் ஒரு நொடிதான். உதடுகளில் நாணப் புன்னகை ஒன்று தோன்றி நிலவியது. கன்னங்களில் செம்மை படர்ந்து பரவியது. பதுமை நாணமுற்று நின்றாள். ‘அவருக்கு ஆட்பட்ட நெஞ்சம் இனி நான் மீட்க முடியாத அளவில் உறவுகொண்டு விட்டது.’ என எண்ணினாள். ‘தங்கைக்கு மணம் புரிகிறேன் என்ற கடமையைக் காட்டித் தமையன், என்னை உதயணனுக்கு உரிமையாக்க ஏற்பாடு செய்கின்றானே’ என்று முன்பு கலங்கியிருந்த பதுமையின் உள்ளம் இப்போது, ‘அவரேதான் இவர்! இவரே தான் அவர் !அவரும் இவரும் ஒருவரே’ என்பதை அறிந்து நிறைவு கொண்டது. ஆனாலும் தனது மனக்களிப்பை யாப்பியாயினி அறிந்து கொள்ளும்படியாக வெளிப்படுத்த விரும்பவில்லை அவள். தான் கேள்வியுற்ற அந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே திருப்தி அடையலாம் என்று அவள் தயங்கினாள்.

“தோழி! உன் கணவனாகிய இசைச்சன்கூட அவருக்குத் தோழன்தான் என்று கேள்வியுற்றேன். நீ கூறும் இந்த நல்ல செய்தியை என் மனம் எவ்வளவு மகிழ்ச்சியோடு வரவேற்கிறது தெரியுமா? ஆனால், இதை எந்தச் சான்றுகொண்டு நான் உறுதியாய் நம்ப முடியும்? என் மனம் உறுதியாக இதை ஏற்றுக் கொள்வதற்கும் நீயே ஏதாவது உதவி செய்ய வேண்டும்” என்று பதுமை தணிந்த குரலில் யாப்பியாயினியிடம் வேண்டினாள்.