பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

“இதை உறுதிப்படுத்திக் கொள்ள இன்னும் என்னென்ன சான்றுகள் வேண்டுமோ அவற்றை அறிய என்னால் ஆனமட்டும் முயலுவேன். பதுமை! நீ என்னைத் துணிந்து நம்பலாம்?” என்று கூறி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் யாப்பியாயினி. நேரே உதயணனைக் காணக்கருதி அவனிருப்பிடத்தை அடைந்தாள். இசைச்சனோடு தான் பேசிய குரலை யாப்பியாயினி கேட்டுத் திரும்பியதையும், அப்போது அவளது வியப்போடு கூடிய பார்வை தன்மேல் நிலைத்ததையும் கண்டிருந்த உதயணன், அவள் தன்னைப் புரிந்துகொண்டு விட்டாள் என அநுமானித்துக் கொண்டான். ‘என் கருத்து வெற்றி பெற்றுவிட்டது. யாப்பியாயினி எப்படியும் தன் சந்தேகத்தைப் பதுமையிடம் கூறாமல் இருக்கமாட்டாள்’ என்று எண்ணிக்கொண்டு மனம் அமைந்தான் அவன்.

உதயணன் தன்னளவில் அநுமானித்துக் கொண்ட வெற்றியை நிச்சயப்படுத்துவதுபோல யாப்பியாயினி தனிமையில் அவன் முன் தோன்றினாள். நடந்ததை எல்லாம் அவள் மூலம் அறிந்து கொண்டான் உதயணன். அவள் கூறியதிலிருந்து பதுமையின் சந்தேகத்தைப் போக்கித் தானே மாணகனாக இருந்ததை உறுதிப் படுத்த வேண்டியது அவசியம் என்பதையும் அவன் உணர்ந்தான். காமன் கோட்டத்தில் தனக்கும் அவளுக்கும் ஏற்பட்ட காதலில் தொடங்கி ஒன்று விடாமல் எல்லா நிகழ்ச்சிகளையும், அவளையும் சித்திரமாக வரைந்து, அதை யாப்பியாயினியிடம் அளித்தான். தானும் பதுமையும் மாத்திரமே அறிந்த பல மறைவுக் குறிப்புக்கள் அந்தச் சித்திரத்தில் இடம் பெறுமாறு செய்திருந்தான் அவன். அவற்றைக் கண்டபின்பாவது தான் வேறு. மாணகன் வேறு அல்ல, இருவரும் ஒருவரே என்பதைப் பதுமை புரிந்துகொள்ள முடியும் என்பதாக, அவன் நம்பினான். கடைசியில் வேறோர் முக்கிய அடையாளத்தையும் யாப்பியாயினியிடம் கூறினான்.

கன்னிமாடத்தில் ஒருநாள் இரவில் கோட்டான் பயங்கரமாக அலறியதையும், அதைக் கேட்டு அஞ்சிப் பதுமை