பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/275

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தம்பியர் வரவு

273

உதயணனைத் தேடி இராசகிரிய நகரத்திற்கு வந்த வயந்தகன், அவன் அங்கிருந்து படைகளோடு கோசாம்பிக்குப் புறப்பட்டுவிட்ட செய்தியறிந்து விரைவாக அவனைப் பின்தொடர்ந்தான். உதயணன் கோசாம்பி நகரத்தை அடைவதற்குள் அவனைச் சந்தித்துப் பிங்கல கடகர்களைப் பற்றி அவனுக்கு நினைவு படுத்தி, அவர்களை ஒன்று சேர்த்து வைப்பது வயந்தகனுக்கு அப்போது கடமையாக இருந்தது. கோசாம்பி நாடு செல்லும் நடு வழியிலேயே வயந்தகன், உதயணனைச் சந்திக்க முடிந்தது.

உதயணனைச் சந்தித்தவுடனே அவன் பிங்கல கடகர்களைப் பற்றிய செய்தியைக் கூறத் தொடங்கினான். “நீ உஞ்சை நகரில் பிரச்சோதனனால் சிறைப்படுத்தப்பட்டிருந்த போது, உன் ஆட்சியுரிமைக்கு உட்பட்ட கோசாம்பி நாடு, உன்னுடைய தம்பியர்களாகிய பிங்கல கடகர்களால் ஆண்டு வரப்பெற்று அமைதியாக இருந்தது. அந்நிலையில்தான் பாஞ்சால வேந்தன் ஆருணி இளைஞர்களாகிய உன் தம்பியரோடு போரிட்டு, அவர்களை நாட்டிலிருந்து துரத்தி விட்டுத் தானே கோசாம்பியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தான். ஆருணியால் துரத்தப் பெற்ற நின் தம்பியர், குதிரைகளில் ஏறிக் காட்டுப் பகுதியில் மறைவாகத் திரிந்து, சில நாள்களைக் கழித்தனர். பின் மன வெறுப்புற்று யமுனை நதியில் வீழ்ந்து உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவர்கள் சென்றபோது, பெண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு தீவு எதிர்ப்பட்டது. அத்தீவில் பன்னிரண்டு மாதங்கள் வசித்த பின்னர் மீண்டும் ஆருணியோடு, போரிட்டு அவனை வெற்றிக் கொள்ள முயலலாம் என்று எண்ணி இப்போது உன்னைப்போலவே வேறோர் இடத்தில் அவர்களும் போருக்கு ஆயத்தமாக இருக்கின்றனர். அவர்களிடம் ஆருணியை வெல்வதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த படை ஒன்று இருக்கிறது. நீ விரும்பிச் சம்மதித்தால் அவர்கள் இப்போதே இங்கு வந்து உன்னோடு கலந்து கொள்வார்கள். நீங்கள் யாவரும் ஒன்று கூடிப் போர் புரிந்தால், ஆருணி தோல்வியுற்று ஓடுவது உறுதி. பின்பு வத்தவ குலம்