பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒற்றர் உரைத்தவை

275

நல்லதாகப் போயிற்று. இனி ஆருணியின் கதி, நெருப்பிடையே அகப்பட்டுக்கொண்ட பஞ்சுப்பொதியைப் போல அழிந்து போவது ஒன்றுதான். நம்முடைய போர்த் திறமைக்கோ, வெற்றிக்கோ இனி எந்தவிதமான குறைவோ, தயக்கமோ இல்லை. இன்று உங்களைச் சந்தித்ததில் இருந்து என்னுடைய நல்ல காலம் தொடங்குகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. எங்கோ ஓடி அழிந்து போனதாக எண்ணி நான் மறந்துவிட்ட நீங்களே, எல்லா நலங்களோடும் திரும்பி விட்டீர்கள். இதேபோல என் அன்பிற்குரிய வாசவதத்தையும் யூகியும்கூட உயிரோடு திரும்பி மிக விரைவிலேயே என் முன் தோன்றுவார்கள் என்று எனக்குள் ஒரு விதமான நம்பிக்கை எழத் தொடங்குகிறது. எனது முன்னைத் தவப்பயன் இப்போதுதான் விளைந்து பயனளிக்கத் தொடங்கியிருக்கிறது போலும்! உங்களை இன்று நான் அடைந்ததுபோலவே பாஞ்சாலனை வென்று, நமது அரசாட்சியையும் நாம் உறுதியாக அடைந்துவிடுவோம்” என்று கலங்கி நிற்கும் தன் தம்பியர்களுக்கு ஆறுதல் கூறினான் உதயணன். இறுதியில் தன் தாயைப் பற்றித் தம்பியர்கள் கூறிய செய்தி நினைவிற்கு வந்தபோது உதயணன் உள்ளம் ஒரு கணம் உருகித் தாழ்ந்தது. தம்பியர்களைப் போலவே தானும் தன் தாய்க்குத் தொண்டு செய்யும் வாய்ப்பை இதுவரை பெற இயலாமற் கழித்தவன் என்ற ஏக்கம், அவன் மனத்தில் அப்போது தோன்றி நிலவி மறைந்தது.

52. ஒற்றர் உரைத்தவை

ருடகாரன் முதலிய அமைச்சர்களை அழைத்துத் தம்பியர்களையும் உடன் வைத்துக்கொண்டு, சில முக்கியமான திட்டங்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு விட்டால் முன்னேற்பாடு நலமாக அமையும் என்று தோன்றியது உதயணனுக்கு. இந்த எண்ணம் தோன்றியவுடனே ஒரு காவலனை அழைத்து, வருடகாரனையும் இடவகனையும் கூப்பிட்டு வருமாறு அனுப்பினான் உதயணன்.