பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

தன்னுடைய செல்வத் தம்பியர்களாகிய பிங்கல கடகர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றியபின், ஆருணியை வென்று அவனிடமிருந்து தங்கள் நாட்டை மீட்கும் வழியைச் சிந்திக்கத் தொடங்கினான் உதயணன. அந்தச் சிந்தனையில் கலந்து கொள்வதற்காக அவன் அழைப்பை ஏற்றுக்கொண்டு வருடகாரனும் இடவகனும் வந்திருந்தனர். மூவரும் கூடி, ஆருணியை வெல்லும் வழியை ஆலோசிக்கலாயினர். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் வருடகாரன் தன் மனத்தில் தோன்றிய வழியைக் கூறினான்.

உதயணனும் இடவகனும் அதைக் கூர்ந்து செவி மடுத்துக் கொண்டிருந்தனர். “அரசர் பெருந்தகையே! ஆருணியை வெல்ல முயலும் இந்த முயற்சியில் நாம் சாதாரண ஆற்றலை மட்டுமே செலவிடக் கருதினோமானால் அது போதாது. பயங்கரமான சூழ்நிலையை உண்டாக்குவதற்கு உரிய சில சூழ்ச்சிகளையும் சற்றும் தயங்காமல் செய்ய முற்பட வேண்டும். நம்முடைய ஒற்றர்கள் ஏற்கெனவே கோட்டைக்குள்ளும் அரண்மனையிலும் சென்று வந்து, நமக்கு எவ்வளவோ பயன்படத்தக்க விவரங்களைக் கூறியிருக்கின்றனர். கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அரணின் நிலையும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த நல்ல வாய்ப்பைத் துணையாகக் கொண்டு நம்முடைய வீரர்களிற் சிலரைக் கோட்டைக்குள் அனுப்பி, ஆருணி அஞ்சி நடுங்கத் தக்க இரகசியக் கலகம் ஒன்றைச் செய்ய வேண்டும். பகல் நேரத்தில் இந்த ஏற்பாடு சாத்தியமாகாது. எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான நேரம் நடு இரவுதான். நடு இரவில் கோட்டை வாயிலின் எல்லாக் கதவுகளையும் அடைத்து விடுவார்கள். ஆகையால் கயிற்று ஏணிகளின் மூலமாகவே தந்திரமாக நம் வீரர்களைக் கோட்டைக்குள் அனுப்பவேண்டும். மதில்களின் பிரம்மாண்டமான சுவர்களைக் கடந்து கோட்டைக்குள் நுழைவதற்கு இதைத் தவிர வேறு வழிகளே இல்லை. இந்த வழியை மேற்கொண்டு உட்புகுந்த நம் வீரர்கள், எதிர்பாராத