பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படைச்செலவு

291

சாய்வதும், எவ்வளவு அமங்கலமான நிகழ்ச்சிகள்? ஆனாலும் ஆருணி இவற்றைப் போருட்படுத்தவும் இல்லை; இவற்றைக் கவனித்து மனத்தில் தவறாகக் கருதவும் இல்லை.

வருடகாரன் வகிர்ந்த கோட்டைச் சிறிதும் மீறாமல், அவன் சொன்னபடி இயங்கும் பொம்மையாக அல்லவா இப்போது ஆருணி இருக்கிறான்? ஆனால் ஆருணியின் அமைச்சனாகிய பூரண குண்டலன் என்பவன், இந்தத் தீய சகுனங்களை எல்லாம் கண்டு மனம் நடுங்கி, “அரசே! இப்போது படையோடு புறப்படுவது நமக்கு நல்ல பயனைத் தரும் என்று தோன்றவில்லை. அமங்கலமான தீய நிமித்தங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன” என்று அறிவுரை கூறிப் பார்த்தான். “இப்படியே நகரத்துக்குத் திரும்பிச் சென்று விட்டுப் படையெடுப்பை ஒத்திப் போடலாம்” என்றும் அந்த அமைச்சனே மேலும் கூறினான். அதைக் கேட்டு ஆருணியும் கொஞ்சம் மனம் தளர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். வருடகாரனுக்கு உடனே ஒரு தந்திரமான எண்ணம் உண்டாயிற்று. அதனால் ஆருணியைப் படையெடுப்புக்குச் சம்மதிக்கச் செய்ய முடியும் என்று அவன் எண்ணினான்.

ஆருணி படையெடுப்பைச் சட்டென்று நிறுத்தி விட்டால் அதுவரை உதயணனும் தானும் செய்திருந்த சூழ்ச்சிகளெல்லாம் வீணாகி விடுமோ என்ற பயம் வருடகாரனுக்கு. எனவே, “அரசே! இந்தத் தீய நிமித்தங்களைக் கண்டு தங்கள் அமைச்சர் பூரணகுண்டலர் தவறாகப் புரிந்து கொண்டு பயப்படுகிறார். இவை நமது பகையாளிகளின் அழிவைக் குறிக்குமே அன்றி, நாம் கனவிலும் இவற்றால் நமக்கு அழிவு நேருமென அஞ்ச வேண்டியதில்லை! இந்தத் தீய சகுனங்கள் உதயணனின் அழிவையே கூறுகின்றன” என்று வருடகாரன் கூறினான். உடனே ஆருணி, “ஆம்! வருடகாரரே! நீர் கூறிய படிதான் இருக்க வேண்டும். அதுதான் சரி. நாம் இதற்குச் சிறிதும் அஞ்ச வேண்டியதே இல்லை. நம்படை தாமதமின்றிப் புறப்படட்டும்” என்று வருடகாரனுக்கு ஒப்பாகப் பேசினான். உடனே பூரண