பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/300

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அவன் மீண்டும் அரியணையில் ஏறும் அந்த நன்னாளை ஒரு பெரும் திருவிழாவாகக் கொண்டாட விரும்பினர் கோசாம்பி நகரத்துப் பெரியோர். உதயணன் அரியணை ஏறும் அந்த விழா நாளை, ஒரு புதிய முடிசூட்டு விழா நாளைப் போலவே கொண்டாட வேண்டுமென்பது அவர்கள் கருத்து. எனவே, ஒரு நல்ல நாளில், நகரை வலம் வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்தபின் அரியணை ஏறச் செய்யலாம் என்று அவர்கள் ஏற்பாடு செய்தனர். குறித்த நாளில் எல்லா வகை அலங்காரங்களும் சிறப்புக்களும் தோன்ற, உதயணன் கோசாம்பி நகரின் அழகிய பெரு வீதிகளில் பரிவாரமும் மக்களும், பெரியோர்களும் புடை சூழ, வீதியுலா வந்தான்.

கருமேகத்திற்கு மேலே வெண்மதிபோலப் பெரியதொரு யானையின்மேலே வெண் கொற்றக்குடை நிழல் செய்ய உதயணன் உலாவந்த காட்சி, காணப் பேரின்பம் பயப்பதாக இருந்தது. மதியின் நிலவுக் கதிர்கள்போல அவனுக்கு இருபுறமும் வெண் சாமரைகள் வீசப்பெற்றன. கங்கையாறு கடலோடு கலப்பதுபோல மக்களின் ஆரவார ஒலியோடு சங்கு, முரசு முதலிய வாத்தியங்களின் ஒலியும் கலந்து ஒலித்தன. ‘உதயணன் வாழ்க!’ என்ற வாழ்த்தொலி வீதிகளிலிருந்து தோன்றி, நாற்றிசைகளையும் எட்டி அளந்தது. வீடுகளின் மாடங்களிலிருந்தும் கோட்டங்களின் கோபுரங்களிலிருந்தும், பெண்களும் முதியோர்களும் மலர்களை மழைபோலப் பொழிந்தனர். இவ்வாறே எல்லா வீதிகளையுங் கடந்து உதயணன் தன் அரண்மனையின் தலைவாயிலாகிய தோரண வாயிலையடைந்தான். இறந்து போன ஆருணியின் மனைவி மக்களிற் சிலர் ‘இனி ஏது செய்வது?’ என்று மயங்கி ஒன்றும் செய்யத் தோன்றாத துயரக் குழப்பத்தோடு அங்கேயே அரண்மனையினுள் இருந்து வருகிறார்கள் என்ற செய்தி அப்போது உதயணனுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அவர்கள் நிலை அவனுக்கு மன நெகிழ்ச்சியையும் இரக்கத்தையுமே அளித்தது. ஆகையால் அவர்களுக்கு வேண்டிய பொருளை