பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

என்ற மிகுந்த அவாவினால், வழிநடையாகவே உஞ்சை நகரத்தில் இருந்து கோசாம்பி நகரத்துக்குப் பயணம் புறப்பட்டு விட்டான். அருஞ்சுகன் இளைஞனாயினும் கல்வி கேள்விகளிலும் இசை முதலிய கலைகளுள்ளும் முதிர்ந்த அறிவும் பயிற்சியும் உடையவன். பேரியாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் முதலிய எல்லா யாழ்களிலும் இசைக்கும் முறை அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வாறு எல்லா நூல்களிலும் எல்லாக் கலைகளிலுமே பயிற்சியுடைய அவன் ஆருணியின் ஆட்சிக் காலத்தில் கோசாம்பி நகருக்கு வரமுடியாதவனாக இருந்துவிட்டதனால், பலநாள் வாராதிருந்த வருத்தம் தீர மகிழ்ச்சியோடு புறப்பட்டிருந்தான் இந்தச் சமயத்தில்.

உஞ்சை நகரத்திலிருந்து கோசாம்பி நகருக்கு வருகின்ற வழி பல காவத தூரம், மலை காடுகளைக் கடந்து வரவேண்டிய அரிய வழியாகும். இடையிலுள்ள மலையடிவாரத்துக் காடுகளில் யானை முதலிய விலக்குகளின் போக்கு வரவும் உண்டு. இதே வழியாகத்தான் ஏற்கெனவே உதயணனும் வந்திருந்தான். இப்போது அருஞ்சுகனும் வழிநடையாகக் கோசாம்பி நகருக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். பயணத்தின்போது அருஞ்சுகன் ஒருநாள் மாலை நேரத்தில், ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியின் இடையே வந்து கொண்டிருந்தபோது, வளைந்து வளைந்து சென்ற காட்டின் முடுக்கு வழிகளிலே திரும்பித் திரும்பி மேலே சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு வழியின் திருப்பத்தில் திரும்பியதும் திடுக்கிட்டுப் போனான்.

அவனுக்கு மிக அருகில் ஒரு பெரிய நீர்நிலையில் பல காட்டு யானைகள் கூட்டமாக நீர் பருகிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டொன்று அவன் வருவதைப் பார்த்தும்விட்டன. அருஞ்சுகன் பதைபதைத்து நடுக்கங் கொண்டான். பயம் அவனைத் திக்பிரமை அடையும்படி செய்துவிட்டது. அந்த யானைகளிடமிருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதே அவனுக்குப் புரியவில்லை. அந்த அபாய