பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/309

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோடபதி கிடைத்தது

307

கரமான நிலையில் அவனுக்குச் சமீபத்தில் ஒங்கி வளர்ந்திருந்த வேங்கை மரம் ஒன்றை அவன் கண்டான். மேலே தாவி ஏறிக்கொள்வதற்கு வசதியாக இருந்த அந்த வேங்கை மரம் அவனுக்கு அப்போது அடைக்கலம் அளித்தது. நீர்நிலையிலிருந்து தன்னை நோக்கித் தாவி வரும் யானைகளிடமிருந்து அந்த மரத்தினால் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். இந்த நிலையிலே அவன் சற்றும் எதிர்பாராத விந்தை ஒன்று நிகழ்ந்து, அவனை ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியது. மரத்தில் இருந்தவாறே அந்த வியப்புக்குரிய அற்புதத்தைக் கண்டு பிரமித்தான் அருஞ்சுகன். அந்த அற்புத நிகழ்ச்சி இதுதான்.

அவன் வேங்கை மரத்தில் வேகமாகத் தாவி ஏறியவுடன் தற்செயலாகக் காற்று சற்றே வலுவாக வீசியது. காற்றின் வேகத்தையும் தான் ஏறும் மரத்தை நோக்கிப் பாய்ந்தோடிவரும் யானைகளையும் கண்டு நெஞ்சு குலைந்து பதைபதைப்பு அடைந்தான் அவன். அதே நேரத்தில் எதிரே வழிமேல் ஓரமாக அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கிற் புதரினுள்ளே இருந்து, ஒரு நல்ல யாழின் இன்னிசை ஒலி காற்றிலே கலந்து வந்தது. ‘அந்த யாழ் ஒலி எப்படி உண்டாயிற்று? யார் அதனை வாசிக்கின்றார்கள்?’ என்று ஐயமும் வியப்பும் கொண்டு திரும்பி நோக்கிய அருஞ்சுகன் இன்னொரு பேரதிசத்தையும் எதிரே கண்டான்.

மதம் பிடித்து வெறிகொண்டவைபோல் அவன் இருந்த வேங்கை மரத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த காட்டு யானைகள், புதிதாகக் காற்றில் கலந்து வந்த இந்த யாழ் ஒலியைக் கேட்டு மந்திரத்திற்குக் கட்டுண்டவைகளைப் போல அப்படி அப்படியே நின்றுவிட்டன. அவை அந்த யாழொலியிலே ஆழ்ந்து ஈடுபட்டுவிட்டனவாகக் காணப்பட்டன. அருஞ்சுகன் மூங்கிற் புதரைப் பார்த்தான். காற்று வீசும்போது அங்கிருந்து யாழ் ஒலி உண்டாவதும், காற்று நின்றால் ஒலி நின்று விடுவதும் அவனுக்குப் புலப்பட்டனவே ஒழிய வேறொன்றும் அவனுக்கு அங்கே காணத் தெரியவில்லை.