பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/319

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இழந்த பொருள்களின் வரவு

317

வெற்றி பெற்றுவிட்டன’ என்ற மனநிறைவு யூகிக்கு அப்போது ஏற்பட்டிருந்தது. எனவே, ‘வாசவதத்தை உயிருடன்தான் இருக்கிறாள்’ என்று கூறி அவனிடத்தில் மீண்டும் ஒப்படைக்கவும், தான் ‘அவல் விக்கி இறந்து போனதாகப் பரப்பிய செய்தி பொய்’ என்று நிரூபித்துக் காட்டவும் ஏற்ற சந்தர்ப்பம் வந்துவிட்டது என்பதை யூகி உணர்ந்தான்.

தனது இந்தக் கருத்தைச் சமயமறிந்து முடித்து வைக்கத் தகுந்தவன் உருமண்ணுவாவே என்ற எண்ணத்தோடுதான், சாதகனைத் தனது திருமுகத்தோடு அவனிடத்துக்கு அனுப்பியிருந்தான். சாதகன் திருமுகத்தோடு தன்னைத் தேடிக் கொண்டு வந்தபோதே, யூகி தான் தன்னிடம் அவனை அனுப்பியிப்பான் என்பதை உருமண்ணுவாவும் ஒரே நொடியில் உய்த்துணர்ந்து கொண்டான். சாதகன் தன்னைத் தேடி வரும்போது அரண்மனையைச் சேர்ந்த யானைக் கொட்டிலின் வாயிலில் யானைப் படைத் தளபதிகள் சிலரோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான் உருமண்ணுவா. தொலைவில் வரும்போதே சாதகனை அடையாளம் கண்டு கொண்டான். சாதகன் கையில் திருமுகச் சுருளோடு தயங்கி நின்ற குறிப்பைக் கண்டதும், அவன் தன்னைத் தனியாக அழைக்கின்றான் என்ற குறிப்பைப் புரிந்துகொண்டு சாதகனோடு வேறு இடத்திற்குத் தனிமையை நாடிச் சென்றான் உருமண்ணுவா. அங்கே சுற்றும் முற்றும் நோக்கிக்கொண்டே யூகியின் திருமுக ஒலையை உருமண்ணுவாவிடம் எடுத்துக் கொடுத்த பின் விவரங்களைக் கூறினான் சாதகன். உருமண்ணுவா, யூகியின் ஒலையை வாங்கிப் படித்தான்.

‘உதயணன் அரசபாரத்தின் பொறுப்பை உணர்ந்து கோசாம்பியைக் கைப்பற்றி அமைதியான முறையில் ஆளத் தொடங்கி விட்டதனால் வாசவதத்தையோடு தானும் மறைவிலிருந்து வெளிப்பட்டுப் பின்பு தத்தையை அவனிடம் ஒப்பித்துவிட்டு, எல்லாவற்றையும் ஐயமற அவனுக்கு விளக்கிக் கூறிவிட வேண்டும்’ என்ற செய்தியைத்தான் யூகி அந்தத் திருமுகத்தில் உருமண்ணுவாவுக்கு எழுதியிருந்தான்.