பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உதயணனுக்கு அந்த முகத்தை அடிக்கடி பார்த்துப் பழகியிருப்பது போலத் தோன்றியது. சிந்தித்த வண்ணம் அந்த முகத்தை ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்த உதயணன் பக்கத்தில் நிற்கும் காவலனை மறந்து, ‘இவனை எங்கேயோ பார்த்துப் பழகினாற்போல இருக்கிறதே’ என்று வாய் விட்டுக் கூறிவிட்டான். கூறிய தோடல்லாமல் வியப்புமிக்க பார்வையுடன் வயந்தகனை மெல்ல நெருங்கினான். காவலன் வேற்றவனாக இடையிலிருப்பதை உணர்ந்து கொண்ட வயந்தகன், தன் மாற்று வேடம் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காக, “இல்லை அரசே தாங்கள் என்னை அறிந்திருக்க நியாயமில்லை” என்று கூறி மழுப்பினான். உடனே உதயணன் அந்த ஆராய்ச்சியிலிருந்து மீண்டான். வயந்தகனுக்குப் போன உயிர் திரும்பிவந்தது. காவலன் இப்போது வெளியேறினான். காவலன் போனானோ இல்லையோ, வயந்தகன் ஒரே தாவாகத் தாவி, உதயணனைத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான். நண்பர்கள் நிகழ்ந்தவற்றை எல்லாம் விரிவாகப் பேசிக் கொண்டனர். யூகியின் திட்டங்களை எல்லாம் உதயணனுக்கு வயந்தகன் கூறினான். பாலகுமரனுக்கு நண்பனாகத்தான் அரண்மனையில் இருப்பதையும் உதயணனிடம் கூறினான். உடனே உதயணன் தன் மாணவனாகிய பாலகுமரனுக்கு ஓர் ஒலையை எழுதி, (மாறுவேடத்திலுள்ள வயந்தகனை) அவனுடைய நண்பனைத் தனக்கு உதவி செய்யும் பணியாளனாகத் தன் மாளிகையில் அமர்த்திக் கொண்டதாக அதில் குறிப்பிட்டு அனுப்பிவிட்டான். அதன் விளைவாக வயந்தகனும் உதயணனும் ஒன்று சேர்ந்தனர். வயந்தகன் உதயணனோடேயே இருந்தான்.

தத்தையின் நினைவால் உதயணன் வாட்ட முற்றிருந்த காட்சி இரங்கத்தக்கதாயிருந்தது. கள்ளுண்டவன் வெறியுற்றதுபோலத் தத்தையைக் கண்ட நாளையே நினைத்து ஏங்கினான் உதயணன். தீமுகத்தில் இட்ட மெழுகு போலக் கரைந்தது அவன் உடல்கட்டு. தாய்முகங் காணாது பிரிவுத்