பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அதைப் படித்தவுடன் உருமண்ணுவாவும் மகிழ்ச்சியே அடைந்தான். ‘யூகியும் தத்தையும் மறைந்தபின், அவர்கள் எங்கே எப்படிக் காலங்கழித்து வந்தார்கள்?’ என்ற செய்தியை அடிக்கடி வந்த திருமுகங்களினால் அறிந்திருந்தான். ஆனாலும் அவற்றை முழுவதும் ஆதியோடந்தமாகக் கூறும்படி அப்போது சாதகனைக் கேட்டான் உருமண்ணுவா. சாதகனும் நிகழ்ந்த யாவற்றையும் முதலிலிருந்து தொடங்கிக் கூறலானான்.

“இலாவாண நகரில் அரண்மனையைத் தீயிட்டுவிட்டுச் சுருங்க வழியாகத் தப்பிப் பிறரறியாமல் காட்டு வழியே சென்றோம். காட்டு வழியில் வாசவதத்தை நடக்க முடியாமல் தளர்ந்தமையால் எங்கள் பயணம் சற்று மெல்லவே நடந்தது. காட்டைக் கடந்து ஒரு தவப்பள்ளியை அடைந்து அங்கே சில நாள் தங்கி இருந்தோம். பின்பு ‘அது தவத்தினர் வசிக்கும் இடமாகையினால் எங்கள் இரகசியம் வெளிப்பட்டு விடுமோ?’ என்று அஞ்சி விரைவில் அங்கிருந்து கிளம்பிச் சண்பை நகரத்தைச் சென்றடைந்தோம். சண்பை நகரத்தில் யூகிக்கு நண்பனாகிய மித்திரகாமன் என்பவன் வீட்டில் சிறிது காலம் மறைவாக வசித்து வந்தோம். மித்திரகாமனின் மனைவி வாசவதத்தையை அன்போடு பேணிப் போற்றி வந்தாள். இந்த நிலையில் சண்டை நகரிலிருந்து அடிக்கடி ஆருணியிடம் கோசாம்பி நகருக்குச் சென்று பழகும் காளமயிடம் என்பவன் அக்கம் பக்கத்தில் எங்களைப் பற்றி ஐயந்தோன்ற விசாரிக்கலானான். சண்பை நகரத்தில் வசித்து வந்தாலும் ஆருணிக்கு ஒற்றனைப் போன்றவன், காளமயிட னென்னும் இந்த அந்தணன். ‘இவன் மூலமாகப் பகைவனான ஆருணி அறிந்து கொள்ளும்படி நம் இரகசியம் வெளிப்பட்டு விடக்கூடாதே’ என்று அஞ்சி, மித்திரகாமனையே துணைக்கு அழைத்துக்கொண்டு சண்பை நகரை விட்டுப் புறப்பட்டுப் புண்டரம் என்னும் நகரத்தை அடைந்தோம். அந் நகரத்தை ஆண்டுவந்த வருத்தமானன் என்னும் அரசன், யூகிக்கு நண்பன் ஆகையால் அவன் ஆதரவில் மறைந்து வாழ்ந்து வர