பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அல்லும் பகலும் நினைந்துருகும், அந்த வாசவதத்தைக்கு இதனால்தான் யாழிசையைக் கற்பித்திருக்கிறீர்கள்! தயவு கூர்ந்து தங்கள் அடியாளாகிய எனக்கும் இந்த அற்புத யாழினால் இசையைக் கற்பியுங்கள்! இது என் அன்பான வேண்டுகோள்” என்று கூறினாள்.

பதுமையின் இந்த வேண்டுகோளை உதயணன் ஒரு பொருட்டாக மதித்து மறுமொழி கூறவே இல்லை. அவள், ‘வாசவதத்தை கற்ற இந்த யாழை நானும் கற்பேன்’ என்று கூறிய சொற்களின் ஒலி நெருப்பிலே காய்ச்சிய வேல்போல் அவன் மனத்திலே பாய்ந்தது. அச் சொற்களால் தத்தையைப் பற்றிய சிந்தனையில் பின்னும் ஆழ்ந்து இலயித்துப்போன அவன், மனமுருகிக் கண்ணிர் சிந்தினான். அவனுடைய துயரம் பெருகுவதைக் கண்டு, தத்தையைப் பற்றித் தான் அப்போது அவனிடம் குறிப்பிட்டதே தவறு என்பதை உணர்ந்து கொண்டாள் பதுமை, தன்னுடைய முதல் மனைவியாகவும் ஆருயிர்க் காதலியாகவும் இருந்து மறைந்துபோன அவளைப் பற்றி அவன் அவ்வாறு நினைப்பது இயற்கையே என்றும் எண்ணினாள் பதுமை. அவன் இப்படி மனம் வருந்தியிருக்கும் இந்த நிலையில், தான் அவனிடம் கோபங்கொண்டு பிணங்குவதுகூடப் பொருந்தாது என்று எண்ணித் தற்செயலாக அங்கிருந்து எழுந்து செல்பவளைப் போலக் குறிப்பறிந்து அவனைத் தனிமையில் விடுத்துச் சென்று விட்டாள் அவள்.

பதுமை சென்ற சற்றைக்கெல்லாம் வயந்தகன் அங்கே உதயணனைக் காண வந்தான். அவன் வரவையும் ஒரு பொருட்டாக மதித்து வரவேற்கவில்லை உதயணன். “பிரிந்து சென்ற வாசவதத்தையை எண்ணிப் பதுமையின்மேல் பாராமுகமாக நடந்து கொள்ளுதல் தகுமா? அவள் என்ன பிழை செய்தாள்? அவள் மேல் வெறுப்பு ஏன்?” என்று அன்போடு குழைந்த குரலில் வயந்தகன் கேட்டபோது, அதற்கும் அவனிடமிருந்து மறுமொழியே பிறக்கவில்லை. பழைய நினைவுகளை எண்ணியும் அரற்றியும் படுக்கையின்