பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/331

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவேறிய நோக்கம்

329

தெரியாது. அரண்மனையை அடைந்து உதயணனின் பள்ளியறை வாயிலுக்கு வந்ததும், “உன்னைப் பிரிந்து, உன் கணவனாகிய உதயணன் எவ்வளவு துன்புறுகின்றான் என்பதை நீயே உள்ளே சென்று கண்டுவா” என்று கூறி அவளை அவர்கள் உள்ளே அனுப்பினார்கள். அவள் உள்ளே நுழைகின்ற நேரத்தில்தான் “வாசவதத்தையே! என் ஆருயிர் மருந்தே! உன்னைப் பிரிந்து ஆற்றாமல் உயிர் பொறுத்து இன்னும் வாழ்கின்றேனே நான்” என்று கனவில் உதயணன் வாய் சோர்ந்து உறக்கத்தின் இடையே அரற்றிக்கொண்டிருந்தான். அவ் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே அவற்றால் மனம் நெகிழ்ந்து கனிய, வாசவதத்தை அவன் உறங்கிக் கொண்டிருக்கும் பஞ்சணைக்கு அருகே சென்றாள். தன்னை நினைந்து வெம்மையான பெருமூச்சுடன் விரகதாபத்தால் பஞ்சனையிலிருந்த மலர்களும் வாடும்படி கோடபதியைத் தழுவியவாறே உறங்கும் கணவனைக் கண்டு, அவள் மனம் பெரிதும் இரங்கியது. கனவிலும் நினைவிலும் அவன் உள்ளத்தில் தானே படிந்திருக்கின்றோம் என்பதை அறிந்து பெருமிதம் உண்டாயிற்று அவளுக்கு. அவள், உறங்கும் தன் கணவன் பாதங்களைத் தீண்டி மெல்ல வணங்கினாள். கோடபதியைக் கண்டதும், தொலைந்து போன மகனை மீண்டும் கண்டடைந்த தாய்போலக் களிப்புற்றாள் அவள்.

பஞ்சணையின் ஒரு புறத்தில் மெதுவாக அமர்ந்து, உதயணன் தழுவிக் கொண்டிருந்த கோடபதியை அவன் உறக்கம் கலைந்துவிடாமல் எடுத்து மெல்ல வாசிக்கத் தொடங்கினாள் அவள். யாழை வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், அந்த இனிய ஓசை காதில் விழுந்ததனாலோ என்னவோ, உதயணன் தூக்கம் கலைந்து மெல்ல கண் விழித்துக்கொண்டான். விழித்த அவன் கண்கள், தன் அருகில் பஞ்சணையில் அமர்ந்து கோடபதியை வாசித்துக் கொண்டிருந்த வாசவதத்தையைக் கண்டனவோ இல்லையோ, வியப்பும் திகைப்பும் தோன்ற விரிந்து மலர்ந்தன.