பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/332

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

“வாசவதத்தாய் வந்துவிட்டாயா?” என்று அவளை நோக்கிக் கூறிவிட்டு எழுந்து, அவள் கூந்தலை நீவியவாறே அவளைத் தழுவிக் கொண்டான் உதயணன். “என்னை நினையாமல் உன்னால் இவ்வளவு நாள்களை எவ்வாறு கழிக்க முடிந்தது?” என்று குழைந்த குரலில், அவளை அணைத்துக்கொண்டே கேட்டான் அவன். வாசவதத்தை அவனுடைய வினாவுக்குப் பதிலே கூறாமல் தலைகுனிந்து நாணிக் கொண்டிருந்தாள். உதயணன் மேலும், தான் இலாவாண நகரில் அவள் வேண்டிக் கொண்டதற்கிணங்கத் தழை, பூ முதலியன கொய்யச் சென்றது, திரும்பி வருவதற்குள் அரண்மனையில் தீப்பற்றி அவள் எரியுண்டது முதலிய செய்திகளைத் திரும்பத் திரும்பக் கூறி அரற்றிக் கொண்டிருந்தான். அவற்றிற்கு வாசவதத்தை வாய் திறந்து மறுமொழி கூறவே இல்லை. நாணியே அமர்ந்திருந்தாள்.

உதயணன் விழித்துக் கொண்டிருந்தாலும், அவன் உடலும் உள்ளமும் உறக்கச் சோர்வில் ஈடுபட்டு மயங்கி இருந்ததனால், தன் எதிரே, வாசவதத்தை அமர்ந்திருப்பது, அவள் வீணை வாசிப்பது, தான் அவளைத் தழுவிக் கொண்டிருப்பது எல்லாவற்றையுமே கனவென்று எண்ணிக் கொண்டானோ என்னவோ? மீண்டும் அப்படியே துக்கத்திலாழ்ந்து விட்டான். அவன் கேட்ட கேள்விக்கு வாசவதத்தை மறுமொழி கூறாமல் எழுதிவைத்த பாவைபோல இருந்தாள். ஆகையினால் கனவு என்றே எண்ணிக் கொண்டு விட்டானோ என்னவோ? சிறிது நேரம் திரும்பத் திரும்ப அரற்றிக் கொண்டே கண்கள் சோர்ந்து அவன் தூங்கிவிட்டான்.

இந்தச் சமயத்தில் பள்ளியறைக் கதவைத் திறந்து கொண்டு வயந்தகன் உள்ளே வந்து. “இன்று தங்கள் நாயகர், தங்கள் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கின்றார் என்பதைக் காட்டுவதற்காகவே இங்கே அழைத்து வந்தோம். நீங்கள் முறைப்படி யூகியுடனே சேர்ந்துவந்து, நாளைப் பகலில் இருவருமாக உதயணனைச் சந்திக்க வேண்டும் என்ற ஏற்பாடு செய்திருக்கின்றோம். இப்போது இனிமேல்