பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நண்பன் யூகியை நோக்கி உதயணன் பேசலானான். “பிறருக்கு நன்மை பயக்கும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு உழைப்பவனாகி, அதனால் துன்பங்கள் எவ்வளவு வரினும் தாங்கும் விந்தை மனிதன், நீ ஒருவன் யூகி! என் நலனுக்காகவே நீ இறந்து விட்டதாகச் செய்தி பரப்பியிருக்கிறாய் என்பது உன்னை நன்கு அறிந்த எனக்கு இப்போதல்லவா தெரிகிறது? எப்படியோ! பழைய நிகழ்ச்சிகள் போகட்டும்! இனி நீ என்றும் என்னைப் பிரியவேகூடாது! பிரிந்தால் பின்பு உன் உதயணனை நீ உயிரோடு காணமாட்டாய்! என்னால் இனி உன்பிரிவைத் தாங்கிக் கொள்ளவும் இயலாது” என்றான் உதயணன.

அப்போது வயந்தகனும் உள்ளே வந்தான். யூகி, வயந்தகன் இருவரும், அதுவரை அவன் நன்மை குறித்தே தாங்கள் அவ்வளவு சூழ்ச்சிகளையும் செய்ய நேர்ந்ததென்பதையும் வாசவதத்தை உயிருடனேயே இருக்கிறாள் என்பதனையும் உதயணனிடம் கூறித் தங்களை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டனர். உதயணன் உடனே வாசவதத்தையைக் காணவேண்டும் என்ற ஆவலால் துடித்தான். யூகியும் வயந்தகனும் அவனைப் பக்கத்திலிருந்த மற்றோர் அறைக்கு அழைத்துச் சென்றனர். உதயணனைக் கண்டதும் வாசவதத்தை தான் அவன் நன்மைக்காவே அதுவரை அவ்வாறு மறைந்து வசிக்க நேர்ந்தது என்று கூறிக் கண்ணிர் சிந்தி அரற்றினாள். அவன் திருவடிகளிலே வீழ்ந்து தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினாள். அவ்வாறு அவள் வணங்கியபோது, அவளது கண்ணிர் அவன் பாதங்களை நனைத்தது. அவிழ்ந்த கருங்குழல் அவன் அடிகளைத் தழுவியது. அவள் நிலை அவனை மனமுருகச் செய்தது. குனிந்து அவளைத் தன் கைகளால் தூக்கி நிறுத்தித் துயரந்தீரத் தழுவிக் கொண்டான்.

அருகிலே நின்ற சாங்கியத் தாய் அப்போது அவன் கண்களில் புலப்படவே, அவளைக் கை குவித்து வணங்கினான். “முன்பே பலமுறை என்னைத் துன்பங்களிலிருந்து மீட்டு