பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/340

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

தன்மையோடு கூடிய மகிழ்ச்சியே தத்தையின் வரவால் அவளுக்கு ஏற்பட்டது. உடனே ஆர்வம் முந்தும் மனத்துடன் பலவகைச் சிறந்த ஆடை அணிகலன்களை ஏந்திய தோழியர்கள் புடைசூழத் தத்தையைக் கண்டு பேசுவதற்கு விரைந்து வந்தாள் பதுமை. அவள் வந்த சமயம் உதயணன் அங்கே இல்லை. வாசவதத்தையும் சாங்கியத் தாயும் மட்டுமே இருந்தனர். உதயணன் தத்தையைத் தன் உயிரினும் சிறந்தவளாகக் கருதி வருவதை நன்கு உணர்ந்தவளாகையினால்தான், பதுமை அங்ஙனம் வலிய தேடி அவளைக் காண வருவதைச் சிறிதும் இழிவாகக் கருதவில்லை. தத்தையை வணங்கித் தழுவிக் கொண்டாள் அவள். “வாசவதத்தை! உன் கற்பின் புகழ் ஓங்கி வளர்க!” என்று பாராட்டினாள். அதன்பின் தத்தையும் அவளும் அருகருகே யிருந்த இரு ஆசனங்களில் அமர்ந்து கொண்டிருந்த தோற்றம் இரண்டு தாமரை மலர்களில் திருமகள் இருவர் அமர்ந்து கொண்டிருந்ததுபோல எழிலாய் விளங்கிற்று. இவர்கள் இங்கு இவ்வாறிருக்க யூகியைத் தன் அரசவை மண்டபத்துக்குக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தான் உதயணன். அரசவையைச் சேர்ந்த யாவரும் யூகியை அன்போடும் பெருமதிப்போடும் வரவேற்றனர். அவையில் உதயணனுக்கு அருகில் யூகி அமர்ந்து கொண்டதும், ‘தன்னை உச்சயினி நகரத்துச் சிறையிலிருந்து மீட்டனுப்பிய பின்பு அவன் எங்கெங்கே, எவ்வெவ்வாறு மறைந்து வாழ்ந்தான்?’ என்பதையும், ‘இலாவாண நகரில் அரண்மனை எரியுண்ட பின் தத்தை, எவ்வாறு எங்கே அவனால் வாழ்விக்கப் பட்டாள்?’ என்பதையும் எல்லோரும் அறியும்படி விவரித்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டான் அவன்.

நடந்தவற்றை எல்லாம் தெளிவாக விவரித்துரைத்தபின், “நீ உனக்குரிய கோசாம்பி நாட்டை மீண்டும் பெறவேண்டும் என்பதற்காகவும், அரசாட்சியின் அருமையையும் பொறுப்பையும் உணர வேண்டுமென்பதற்காகவும், தம்பியர்களாகிய பிங்கல கடகர் உன்னை வந்தடைவதற்காகவுமென்றே உன்