பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமையின் பெருந்தன்மை

339

மேல் எனக்குள்ள உரிமையைப் பாராட்டி இவைகளை எல்லாம் சூழ்ச்சியாகச் செய்தேன்” என்று உதயணனிடம் கூறினான் யூகி. மறைந்த வாழ்வின்போது தன் திட்டங்களுக்கு ஏற்ப ஒத்துழைத்த உருமண்ணுவா, வயந்தகன், இடவகன் முதலியோரைப் பாராட்டி யூகி நன்றி தெரிவித்துக் கொண்டான். வயந்தகன், உருமண்ணுவா முதலியோரும் அப்போது அங்கே அரசவை மண்டபத்திலேயே இருந்தனர். உதயணன், “யூகி! உனக்கும் எனக்கும் உள்ள நட்பு உயிரோடு ஒன்றிய நட்பு. நீ செய்திருப்பவை எல்லாம் என் நன்மையின் பொருட்டே என்பதை நான் உணர்கிறேன்” என்று யூகியை நோக்கி இனிய மொழிகளாற் சொன்னான். அவ்வளவில் அரசவை அன்று கலைந்தது.

அரசவையிலிருந்து உதயணன் அந்தப்புரத்திற்கு வந்த போது பதுமையும் வாசவதத்தையும் சேர்ந்து அவனெதிரே வந்து அவனை வரவேற்றனர். அவர்களது இணையான அந்தக் காட்சி உதயணனை வியப்பும் மயக்கமும் அடையும்படி செய்தது. அன்று உதயணன் உண்ணும்பொழுது பதுமை, தத்தை இருவரும் சேர்ந்து உணவு பரிமாறி அவனை உபசரித்தனர். தான் உண்டு எழுந்தவுடன் அவர்களை நோக்கி, “நீங்கள் இருவரும் இன்று ஒரே உண்கலத்தில் சேர்ந்து உண்ணுங்கள்! அந்த அழகிய உருக்கமான காட்சியை நான் அருகேயிருந்து காணப் போகின்றேன்” என்று உதயணன் வேண்டிக் கொண்டான். பதுமையும் தத்தையும் சிரித்துக் கொண்டே அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டனர். அங்ஙனமே சேர்ந்து உண்ணவும் செய்தனர். உதயணன் அதைக் கண்டு மகிழ்ந்தான்.

சாப்பிட்டு முடிந்ததும் பதுமை உதயணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, “இதுவரை எத்தனையோ திங்கள் தத்தையைப் பிரிந்து வேதனையுற்று இருந்தீர்கள்! உங்களுக்காக நீண்டகாலப் பிரிவு என்னும் மகத்தான தியாகத்தைச் செய்திருக்கும் கற்பின் செல்வி தத்தையுடன், என்னைச் சில நாள்கள் மறந்து, தாங்கள் ஒருங்குகூடி