பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பந்தாடிய சுந்தரிகள்!

349

படுத்திக் கொள்ளுமாறு அளித்தான். இத்தகைய நிறைவான வசதிகளோடு உஞ்சை நகரப் பிரயாணத்தில் மனம் விரும்பி ஈடுபட்டுப் புறப்பட்டான் யூகி.

66. பந்தாடிய சுந்தரிகள்

யூகி உஞ்சை நகரத்திற்குச் சென்ற பின்பு, பலநாள் பிரிந்த துயரம் தீரக் காதலி தத்தையின் எழிலில் திளைத்தும் பதுமையின் வனப்பில் மயங்கியும் இன்பமயமான வாழ்க்கையை மேற்கொண்டான் உதயணன். தத்தையும் பதுமையும் அரண்மனையிலுள்ள ஆடல் பாடல் மகளிரும் அருங் கலைஞர்களுமே உதயணனுடைய நாள்களை இன்பமும் சுவையும் நிறைந்திடச் செய்தனர். எந்நேரமும் மகிழ்ச்சி நிறைந்திடப் போது கழிந்தது உதயணனுக்கு.

உதயணன் வெளியே உலாவச்செல்லும் நாள்களில் அவன் இல்லாத நேரத்தில், அரண்மனைச் சோலைக்கு இடையே உள்ள வெளியில் தோழிகளுடனேயே பதுமையும் வாசவதத்தையும் பந்தாடுவது வழக்கம். உதயணன் அரண்மனையில் இருக்கும் நேரங்களிலே அவர்கள் இந்தப் பொழுது போக்கு விளையாட்டை மேற்கொள்வதில்லை. தான் இல்லாதபோது அவர்கள் பந்து விளையாடுகிறார்கள் என்ற செய்தியை வயந்தகன் மூலமாக உதயணன் அறிந்து கொண்டான். வயந்தகன் அவர்களுடைய பந்தாட்டத்தை விவரித்து வருணித்ததைக் கேட்ட உதயணனுக்குத் தானும் ஒருமுறை மறைந்திருந்து அந்த விளையாட்டைக் காண வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.

உதயணன் பாஞ்சால ராசனாகிய ஆருணியை வென்ற போது, ஆருணியின் உரிமை மகளிராகிய ஆடலங் கணிகையர் பலரைக் கைப்பற்றியிருந்தான். வாசவதத்தை வந்தபின்பு அந்த மகளிரை இரு பகுதியாகப் பிரித்துப் பதுமைக்கு ஓர் பகுதியும் தத்தைக்கு ஓர் பகுதியுமாகக் கொடுத்து விட்டிருந்தான். அவர்களும் இந்த பந்தாட்டத்தில் கலந்து கொண்டு விளையாடினர். வாசவதத்தையும் பதுமையுமாகக்