பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

தவறுகளைச் சொல்லிவிட்டுப் பந்தாட வேண்டிய முறையைப் பற்றியும் விளக்கிக் கூறிய பின்பே அவள் விளையாடுவதற்காகப் பந்தை எடுத்தாள்.

நல்ல பந்துகளாக இருபத்தொரு பந்துகளைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டாள் அவள். விளையாட்டிற்காக அவள் செய்துகொண்ட ஆயத்தங்களே, அவளுடைய ஆடும் திறமையைப் புலப்படுத்துவன போலத்தெரிந்தன. இது வரை பெண் யானைமேல் இளநங்கைபோல மாறுவேடங் கொண்டு பார்த்து வந்த உதயணன், மானனீகை என்ற அந்த பெண்ணின் அழகாலும் ஆட்டத்தாலும் பெரிதும் கவரப்பட்டான். அவள் அழகிலும் பந்தாடும் விதத்திலும் ஒரு வகை மோகமும் கவர்ச்சியும் ஏற்பட்டு மயங்கியது அவன் உள்ளம். கூந்தல் குழன்று சரிய, குதூகலம் திகழும் முகத்தில் குறுகுறு வென்று வியர்வரும்பக் கண்களும் புருவங்களும் பாய்ந்து வளைந்து பந்துக்கு ஏற்பத் திசைகளிலே மாறிமாறித் திரும்ப, அபூர்வமான அழகும் கலைத்திறனும் காட்டி விளையாடினாள் மானனீகை. அவளுடைய அந்த அருமையான ஆட்டத்திற்கும் அழகிற்கும் உதயணனுடைய மனம் சிறிது சிறிதாக அவனையறியாமலே தானாக அடிமைப்பட்டுக் கொண்டிருந்தது. அவனால் அதைத் தடுக்க முடியவில்லை.

பந்தாட்டத்தின் பலவித சாதுரிய நிலைகளையும், வகைகளையும் தன் ஆட்டம் மூலமாக யாவரும் கண்டு ஆச்சரியமடையும்படி செய்த மானனீகை, எண்ணாயிரம் எண்ணிக்கை ஆடி முடித்தபின்பே பந்தைக் கீழே வைத்தாள். இருபத்தொரு பந்துகள் அவள் ஆடுவதற்குப் பயன்பட்டிருந்தன. மானனீகையின் இந்த நிகரற்ற வெற்றியால் வாசவதத்தையின் பக்கம் மாபெரும் மகிழ்ச்சி யாரவாரம் எழுந்தது. மானனீகையின் ஆட்டம் இருகட்சியினரையுமே வியப்பிலாழ்த்திவிட்டது. ‘இந்தப் பெண்ணின் அழகை நம் அரசன் காண நேர்ந்தால் பின்பு நம்மை நினைத்துக்கூடப் பார்க்கமாட்டானே இவள் அழகுதான் எவ்வளவு அரிது?’ என்று காரணமற்ற ஒரு விதமான பொறாமை எண்ணமும் மானனீகையைக் கண்டு