பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/356

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

தோன்றியது அவனுக்கு. அவ்வாறே செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அவனும் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றான். சென்று அரண்மனையை அடைந்தவுடன் குற்றேவல் மகளிராகிய பணிப் பெண்களை அழைத்து, “அந்தப் புரத்திற்குச் சென்று பதுமையை உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள்! தத்தையின் அந்தப்புரம் போய் அவளையும் அழைத்து வாருங்கள்!” என்றான். அவன் மனவுணர்வுகள் கட்டுக் கடங்காத ஆவலில் இருந்தன. உதயணன் கூப்பிட்டனுப்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் பணிப் பெண்கள், தத்தையும் பதுமையும் முன்வரப் பின் தொடர்ந்து அவனிடம் அவர்களை அழைத்து வந்தனர். பதுமை, தத்தை இருவரும் அவனை வணங்கித் தங்களை அப்போது அழைத்தனுப்பிய காரணம் யாதென்று இனிய மொழிகளாலே கேட்டனர்.

67. மானனீகை மயக்கம்

ன் முன்வந்து நின்ற வாசவதத்தையையும் பதுமையையும் நோக்கி, “உங்களோடு சற்றுமுன் பந்தாடிய தோழிப் பெண்கள் எல்லாரையும் ஒருவர்கூட விட்டுப் போகாமல் இப்போதே இங்கே அழைத்து வாருங்கள்” என்று உதயணன் கூறினான். அதைக் கேட்ட பதுமையும் தத்தையும் தத்தம் தோழிமார்களை அழைத்து வருமாறு மீண்டும் அருகிலிருந்த பணிப் பெண்களையே அனுப்பினர். அவர்கள் சென்று மானனீகையைத் தவிர இரண்டு தேவி மார்க்கும் சொந்தமான எல்லாத் தோழிப் பெண்களையும் கூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினர். அவர்கள் யாவரும் வந்தவுடன் உதயணன் தன் கோப்பெருந்தேவியர்களாகிய பதுமையையும் தத்தையையும் நோக்கி, “இதோ நிற்கும் உங்கள் தோழியர்களை ஒவ்வொருவராகச் சுற்றம், குலம், பேர், ஊர் முதலிய விவரங்களோடு எனக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். அவர்களும் அவ்வாறே அறிமுகம் செய்தனர். ‘மானனீகை வராததை உதயணன் கண்டுபிடித்து