பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/359

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மானனீகை மயக்கம்

357

அரண்மனையில் உங்கள் அந்தப் புரத்திற்கு உரிமை மகளிராய் இருக்கின்றோம். என் வரலாறு இதுதான். தாங்கள் கேள்விப் பட்டதுபோல ஆருணியைப் பற்றி எனக்கு வேறு ஒன்றும் தெரியாது” என்று சிரித்துக் கொண்டே விடை கூறினாள்.

மானனீகை தன் சொந்த வரலாற்றைப் பற்றிக் கூறிய போது நிறுத்தி நிறுத்திக் கூறிய விதத்திலிருந்து, அதில் அவள் எதையோ மறைக்க முயல்வதுபோலத் தென்பட்டது உதயணனுக்கு. அவள்மேல் தான் கொண்டுள்ள காதல் ஆர்வத்தை அப்போது உடனடியாக அவளிடம் வெளியிடுவதிற் பயனில்லை' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு உதயணன் அவளைத் தன்னோடு நெருங்கிப் பழகச் செய்வதற்கு ஏற்ற பதவி ஒன்றில் நியமிக்கக் கருதினான். அவ்வாறு நியமித்துவிட்டால் மானனீகை தன்னோடு பன்முறை பழகித் தன் உள்ளத்தை உணர்ந்து அன்பு கொள்ள வழிபிறக்கும் என்று அவன் நம்பினான். “அப்படியானால் இன்று முதல் நீயே வாசவதத்தைக்கும் வண்ணமகளாய் இருந்து பணிபுரிய வேண்டும். உன்னுடைய அலங்காரத் திறமை எல்லாம் வெளிப்படுமாறு அவளை நீ அழகு செய்க” என்று மானனீகையிடம் உதயணன் கூறினான்.

மானனீகையும் உடனே தத்தைக்கு வண்ணமகளாக இருப்பதற்குத் தனக்குப் பூரண சம்மதம் என்று கூறிச் சென்றாள். வாசவதத்தையின் வண்ணமகளாக நியமிக்கப் பெற்ற பின்பு, நாள் தவறாமல் தத்தையை நன்கு அலங்காரஞ் செய்து உதயணன் காணும்படி செய்து வந்தாள் மானனீகை. சித்திரம் எழுதுபவர்கள் கண்டாலும் வெட்கமடையுமாறு அவ்வளவு திறமையுடன் தத்தையை மானனீகை அணி செய்து அனுப்புவாள். ஆனால், உதயணன் தத்தையின் அழகைக் கண்டு இரசிப்பதற்குப் பதிலாக, மானனீகையின் காதல் மயக்கத்தில் சிக்கிச் சிதைந்து தவித்துக் கொண்டிருந்தான். தனக்கும் மானனீகைக்கும் இடையே வளர வேண்டிய காதலை வளர்ப்பதற்காகத் தத்தையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அவ்வளவிற்குத் துணிந்து விட்டான் அவன்.