பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/361

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மானனீகை மயக்கம்

359

தத்தைக்கு அலங்காரம் செய்தபோது தான் அவனுக்கு எழுதிய பதிலில், ‘என் மீது அன்பு பூண்ட தேவரீர் எழுதியனுப்பிய திருமுகத்தைக் கண்டேன். இத்தகையதொரு சூழ்ச்சிமுறையால் வாசவதத்தையை இதற்குப் பயன்படுத்திக் கொள்வது எனக்கு மிக்க பயத்தை அளிக்கிறது. பேதை மீது இவ்வளவு மிகுந்த அன்பு தங்களுக்கு வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். என் போலப் பெண்ணாகப் பிறந்த ஒருத்திக்கு, இது நடுக்கத்தை உண்டாக்குவதாக இருக்கிறது. தத்தைக்குத் துரோகமாக அமையக்கூடிய இதனை, அறமுறைக்கு மாறாக நான் செய்ய விரும்பவில்லைய என்று எழுதி அவளை உதயணனிடம் அனுப்பினாள்.

மானணிகையின் மறுமொழியுடனே தத்தையைக் கண்ட உதயணன், அதைப் படித்து வெந்த புண்ணில் வேல் எறிந்தது போலக் கலங்கினான். மானனீகை தன் கருத்துக்கு இசையாதவள்போல அஞ்சி எழுதியிருந்த சொற்கள் அவனை வருத்தின. உடனே, இந்த அலங்காரத்தில் பிழைகள் மலிந்திருக்கின்றன. வேறு நான் செயகிறேன் பார் என்று தத்தையிடம் கூறி, அவள் அலங்காரத்தைக் குலைத்து, ‘இன்றைக்குள் உன்னைச் சந்தித்து அளவளாவ முடியாமற் போகுமானால் நான் இறந்துபோவது உறுதி மறுமொழி எதிர்பார்க்கிறேன்’ என்று புதிதாக மானனீகைக்கு எழுதி, அதை உடனே சென்று மானனீகையிடம் காட்டுமாறு தத்தையை அனுப்பினான். உடனே சற்றைக்கெல்லாம் தத்தை அதை மானனீகையிடம் சென்று காட்ட அவள் உதயணன் பிடிவாதத்திற்கு அஞ்சி மறுக்க முடியாமல் தத்தைக்கு வேறு அலங்காரம் செய்பவள் போல், ‘இன்றிரவு கூத்தப் பள்ளியிலிருக்கும் குச்சரக் குடிகையில் காத்திருக்கவும். அங்கு வந்து சந்திப்பேன்’ என்று மறுமொழி எழுதி அவளை உதயணனிடம் அனுப்பினாள்.

வாசவதத்தை திரும்பவும் வரக்கண்ட உதயணன் மனம்மகிழ்ந்து அவளை அருகிற்கொண்டு மானனீகை தனக்கு எழுதியிருப்பதைப் படித்துணர்ந்து மகிழ்ந்தான்.