பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/362

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மானனீகை சந்திப்பதற்குச் சம்மதித்து, இடமும் குறித்து அனுப்பியிருந்தது அவனை உவகைக் கடலுள் மூழ்கச் செய்தது. ‘தத்தை! இந்த அலங்காரத்தில் ஒரு பிழையும் இல்லை. இது நன்றாக இருக்கிறது. மானனீகையை நான் பாராட்டியதாகக் கூறு’ என்று சொல்லித் தத்தையை அனுப்பி விட்டான் அவன். பகல் கழிந்து இரவு எப்போது வரப் போகிறது என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்துத் துடி துடித்தது அவன் உள்ளம். இரவு வந்தது. மானனீகை வாசவதத்தையின் அந்தப்புரத்திலிருந்து மறைவாக வெளியேறித் தான் குறிப்பிட்டிருந்த கூத்தப்பள்ளியில் குச்சரக் குடிகையுள் சென்று இருந்தாள்.

உதயணன் வரவை எண்ணி, நேரம் கழிந்து கொண்டிருந்தது அவளுக்கு. உதயணன் தான் கூத்தப்பள்ளியில் மானணிகையைச் சந்திக்கச் செல்வது பதுமை, தத்தை இருவருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக இருவரையும் ஒரு தந்திரமான வழியினால் ஏமாற்றினான். வாசவதத்தையிடத்தில் தான் அன்றிரவு பதுமையின் அந்தப்புரத்தில் தங்கப் போவதாகவும், பதுமையிடத்தில் தான் அன்றிரவு வாசவதத்தையின் அந்தப்புரத்தில் தங்கப் போவதாகவும் தனித்தனியே கூறி இருவரையும் ஒருங்கே ஏமாற்றி விட்டுக் கூத்தப்பள்ளியில் மானனீகையைக் காணப் புறப்பட்டான். தான், பதுமை-தத்தை இருவரையுமே ஏமாற்றிவிட்டதாக அவன் எண்ணம். ஆனால் அன்று காலையில் மானனீகையும் அவனுமாகத் தன்னைப் பலமுறை அலங்கரித்து ஒருவர்பால் ஒருவர் அனுப்பியதாலும் வேறு சில நினைவுகளினாலும் மனத்திடையே மானனீகை, உதயணன் உறவைப்பற்றி ஐயம் கொண்டு சிந்திப்பதற்குக் காரணமாக இருந்ததாலும் தத்தை உண்மையறிந்து வருமாறு காஞ்சனமாலை என்னும் தோழியை உதயணன் அறியாமல் அவன் பின்னே அனுப்பியிருந்தாள்.

உதயணன் இரவில் எவரும் அறியாமல் கூத்தப் பள்ளியின் உட்புறம் புகுந்தபோது காஞ்சனமாலையும் அவன்