பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/373

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மானனீகை பிழைத்தாள்

371

போலவே நானும் ஆறு ஏழு நாழிகைகள் மானனீகை அவமானப்படாமல் இன்னும் காத்துவிட எப்படியேனும் முயல்கிறேன். அதுதான் என்னாலும் முடியக் கூடியது. அதற்குள் நீ வேறு ஏதாவது செய்ய இயலுமானால் செய்” என்று கூறிவிட்டு வாசவதத்தையின் அந்தப் புரம் நோக்கிச் சென்றான்.

வாசவதத்தையின் அந்தப்புரத்தினுள் நுழைவதற்கு முன்னால், கண்டவர் அருவருக்கத்தக்க தோற்றமுடைய ஒரு பித்தனைப்போல யூகி மாறுவேடங் கொண்டான். உடலெல்லாம் வெண்ணிறச் சாம்பலைப் பூசிக்கொண்டு, கிழிந்த ஆடைகளை அணிந்து, மிரள மிரள விழிக்கும் கண்களுடனே தத்தை, மானனீகை, வயந்தகன் ஆகியவர்கள் இருக்கும் இடத்தில் யூகி தோன்றினான். ‘திடும்’ என்று அந்தப் பித்தனை அங்கே கண்டதும் வாசவதத்தையின் தோழிகள் பக்கத்திற்கொருவராகச் சிதறி அச்சத்தோடு ஓடினர். வாசவதத்தைக்கும் அங்கே தோன்றிய அந்தப் பித்தனது தோற்றம் அச்சத்தை உண்டாக்கினாலும் ஒருபுறம் அடக்கமுடியாத சிரிப்பு தோன்றி வெளிப்பட்டது. அந்நிலையில் மானனீகையின்மேல் இருந்த தன் கவனத்தை முற்றிலும் பெயர்த்துப் பித்தன்மேல் செலுத்தித் தன் இதழ்களில் நகை திகழ மேன்மேலும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வாசவதத்தை. இந்தச் சமயத்தில் மானனீகைக்கு அருகே கையில் கத்தரிகையோடு நின்று கொண்டிருந்த வயந்தகன் அதை ஒரு புறமாக மறைத்து வைத்துவிட்டு, ‘நடந்த செய்திகளை உதயணனிடம் போய் உடனே கூறுமாறு’ அங்கிருந்த தோழிப் பெண் ஒருத்தியை அனுப்பினான். அங்கே யூகியை அனுப்பிவிட்டு மேலே என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த உதயணனுக்குப் பதுமாபதியின் நினைவு வந்தது. ‘அவளை அழைத்து, அவள் மூலமாகத் தத்தையைச் சினந்தணித்து, மானனீகையை விடுதலை செய்யும்படி ஏதாவது முயல முடியாதா?’ என்று தோன்றியது அவனுக்கு. உடனே