பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/375

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தூதுவர் வரவும் வேதனை அழிதலும்

373

மானனீகை தற்காலிகமாகப் பிழைத்தாள். அவசரப்பட்டுப் பதறி உடனே மானனீகையைத் தண்டித்துவிடாமல், சற்றே நிதானமாக யோசித்தாள் வாசவதத்தை.

70. தூதுவர் வரவும் வேதனை அழிதலும்

த்தையிடம் பதுமாபதி மானனீகையைத் துன்புறுத்தலாகாதென்று வேண்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில், அங்கே உதயணன் முன்னிலையில் அப்போதுதான் வந்திருந்த கோசல நாட்டு அரசனுடைய தூதுவர்களை அழைத்து வந்து நிறுத்தினார்கள் அரண்மனைக் காவலர்கள். உதயணன் அவர்களை அன்புடனே வரவேற்று அமரச் செய்து, அவர்கள் வந்த காரியத்தை வினாவினான். தங்கள் அரசனாகிய பிரச்சோதனன், உதயணனுக்கு ஒரு திருமுகமும் தனியாக வாசவதத்தைக்கு ஒரு திருமுகமும் கொடுத்தனுப்பியதாகக் கூறி, வாசவதத்தைக்கு அனுப்பிய திருமுகம், உதயணனுக்கு அனுப்பிய திருமுகம் இரண்டையுமே எடுத்து அவனிடம் கொடுத்தார்கள், அந்தத் தூதுவர்கள். திருமுகங்களை வாங்கிக் கொண்டதும் மின்னல் வேகத்தில் உதயணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘இந்தச் சமயத்தில் கோசலத்தரசனுடைய இத்திருமுகத்தை அங்கே வாசவதத்தைக்குக் கொடுத்து அனுப்பினால், அவள் கவனத்தை மானனீகையின் மேலிருந்து திருப்பிவிடலாம்’ என்றெண்ணி ஒரு குற்றேவல் மகளை அழைத்து அதை உடனே தத்தையிடம் சேர்க்குமாறு கொடுத்தனுப்பினான்.

திருமுகத்தை வாசவதத்தையிடம் சேர்த்துவிடுவதற்காகப் பெற்றுக் கொண்டு சென்ற பணிப்பெண் தத்தையும் பதுமையும் தனியே நின்று உரையாடிக் கொண்டிருந்தபோது அதைக் கொண்டு வந்து தத்தையை வணங்கி அவளுடைய கையிற் கொடுத்தாள். தத்தை அருகிலிருந்த பதுமையிடம் அந்தத் திருமுகத்தைக் கொடுத்து அதை உடனே தனக்கு வாசித்துச் சொல்லும்படி வேண்டிக் கொண்டாள்.