பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/376

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பதுமை திருமுகச் சுருளைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினாள். ‘கோசலத்தரசன் ஓலையை வாசவதத்தை காண்பாளாக: உன்னுடைய தங்கை (கோசலத்தரசன் ஒரு வகையால் வாசவதத்தைக்குச் சிறிய தந்தை முறையுடையவனாக வேண்டும்) வாசவதத்தை (மானணிகையின் இயற் பெயர்) பாஞ்சால நாட்டரசன் ஆருணி என் நகரத்தைக் கைப்பற்றியபோது இங்கிருந்த மற்ற உரிமை மகளிரோடு அவனாற் பிடித்துக் கொண்டு போகப்பட்டாள். மகளைப் பிரிந்த துயரத்தால் நானும் என் தேவியும் துன்பத்தில் ஆழ்ந்து போயிருக்கின்றோம். சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டோம். ஆருணியிடமிருந்து உதயணன் கோசாம்பி நகரத்தை வென்றபோது, ஆருணியின் அந்தப்புரத்து மகளிர் யாவரும் அவனிடம் அகப்பட்டனராம். அப்படி அகப்பட்ட உரிமை மகளிரை உதயணன் உனக்கும் பதுமைக்குமாகப் பிரித்து வழங்கியிருக்கிறானாம். அந்தப் பெண்களுள் மானனீகை என்னும் மறுபெயர் பூண்டு, ‘தான் கோசலத்தரசனின் கோப்பெருந்தேவி வசுந்தரியிடம் வண்ணமகளாக இருந்ததாகவும் அப்போது ஆருணியாற் சிறைப் பிடிக்கப் பட்டதாகவும்’ கேட்பவர்களிடம் எல்லாம் பொய் வரலாறு கூறிக்கொண்டு, என் மகளும் உன் தங்கைமுறை உடையவளுமான வாசவதத்தை அங்கேயே இருந்து வருகின்றாள் - என்று அறிந்துகொண்டேன். இது உண்மைதானா? மானனீகை என்னும் பெயரோடு அங்கிருக்கும் அந்தப் பெண் என் அருமை மகள் வாசவதத்தை தானா என்பதை அறிந்து கொள்வதற்கு நானே விரைவில் அங்கே, கோசாம்பி நகரத்துக்குப் புறப்பட்டு வரலாம் என்று எண்ணி இருக்கின்றேன். அதுவரை அந்தப் பெண்ணைக் கண்காணித்து அவளுக்கு ஒரு குறையும் நேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு ஆகும்” என்று இவ்வாறு அந்தத் திருமுகத்தில் எழுதியிருந்ததைப் படித்தாள் பதுமை.

“எதற்கும் நீயே ஒருமுறை தெளிவாகப் படித்துவிடுவது தான் நல்லது! எனக்கு இதில் ஒன்றுமே விளங்கவில்லை"