பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/378

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பெண்களையும் பிறரையும் உடனே அங்கிருந்து விலகிச் செல்லுமாறு தத்தை பணித்தாள். யாவரும் விலகிச் சென்றனர்.

மாறுவேடத்தில் பித்தனாக இருந்த யூகியும் கத்தரிகையைப் பயன்படுத்துவதற்காக நின்று கொண்டிருந்த வயந்தகனும்கூட அங்கிருந்து சென்றுவிட்டனர். கூட்டம் கலைந்த பின்பு வாசவதத்தை, மானனீகையை அன்போடு கைப்பற்றி அழைத்துக்கொண்டு தனது அந்தப்புரம் நோக்கிச் சென்றாள். போகும்போதே, தன் தந்தை தத்தைக்குத் தூதுவர்கள் மூலம் திருமுகம் அனுப்பியிருப்பதும் வாசவதத்தை தனக்குத் தவ்வை (அக்காள்) முறை ஆக வேண்டும் என்பதையும் அவளிடமிருந்தே கேட்டுத் தெரிந்துகொண்டாள் மானனீகை. “நான் உனக்கு அலங்காரம் செய்கிறேன் என்ற பேரில் உன் முகத்தில் யவன மொழியில் அவருக்குக் காதல் கடிதம் எழுதியதும் நீ அறியாமல் அவரோடு காதல் ஒழுக்கம் மேற்கொண்டு ஒழுகியதுமாகிய செயல்களை நீ மன்னித்து விட வேண்டும்” என்று உள்ளமுருகக் குழைந்து வாசவதத்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் மானனீகை. “அவற்றை எல்லாம் மீண்டும் நினைந்து மனம் கலங்க வேண்டாம்” என்று அவளுக்குக் கனிந்த மொழியால் ஆறுதல் கூறினாள் தத்தை. மானனீகையைத் தன் அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்று வாசவதத்தை தன் கைகளாலேயே அவள் கூந்தலுக்கு எண்ணெய் பூசி நீராட்டினாள். பதுமையும் அப்போது மானனீகையை உபசரிப்பதில் தத்தைக்கு உதவியாக இருந்தாள். நீராட்டு முடிந்ததும் இருவரும் அவளை நன்றாக அலங்கரிக்கத் தொடங்கினார்கள். அலங்காரம் முடிந்தபின் மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர்.

இங்கு இவர்கள் இவ்வாறிருக்க வயந்தகனிடமிருந்து நடந்தவற்றை எல்லாம் கேள்விப்பட்டு அறிந்து கொண்டான் உதயணன், மானனீகை யார் என்பதையும் மற்ற விவரங்களையும் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் அவன் உள்ளம் களித்தது.