பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/380

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நகரத்து அரண்மனையில் உதயணன் மானனீகை திருமணம் சிறப்புற நடந்தேறியது. பதுமையும், வாசவதத்தையும் தாமே மானனீகைக்கு வதுவைக்கோலம் புனைந்தனர். யூகி, வயந்தகன், கோசலமன்னன் யாவரும் வாழ்த்திப் புகழ நிகழ்ந்து முடிந்தது அந்தத் திருமணம். உதயணன், மானனீகை இருவர் மனோரதமும் தடையின்றி நிறைவேறியது. உதயணனின் மூன்றாவது மண வாழ்வு தொடங்கியது.

71. மந்தர முனிவர் வந்தார்

மானனீகை, உதயணன் திருமணத்திற்குப் பின்பு கோசாம்பி நகரத்து அரண்மனை வாழ்க்கை அமைதியும் இன்பமும் மிகுந்ததாகச் சென்று கொண்டிருந்தது. இஃது இவ்வாறு இருக்க முன்பு உதயணனால் மாலை தொடுத்துச் சூட்டப்பெற்ற, இலாவண மலைச்சாரலின் தவப் பள்ளியைச் சேர்ந்த விரிசிகை என்னும் பெண்ணின் நிலைபற்றி அறிய வேண்டாமா? வாசவதத்தை முதலியவர்களுடன் உதயணன் இலாவான மலைச்சாரலில் உண்டாட்டு விழாவிற்காகத் தங்கியிருந்தபோது அங்குள்ள ஒரு முனிவரின் ஆசிரமத்தில் விரிசிகையைச் சந்தித்து அவளுக்கு அழகிய மாலை, கண்ணி முதலியவைகளைத் தொடுத்துச் சூட்டினான். அப்போது அங்கே வந்த தத்தை, உதயணன் மேற் கோபம் கொண்டு ஊடினாள். உதயணன் தன்னை மடியில் இருந்திக் கொண்டு மாலை சூட்டிய நிகழ்ச்சியை அவன் அங்கிருந்து சென்ற பின்பும் விரிசிகையால் மறக்க முடியவில்லை. அந்த நினைவும் இன்ப உணர்ச்சியும் அவள் உள்ளத்தில் என்றென்றும் அழியாத ஓவியங்களாக நிலைத்துவிட்டன. அன்று உதயணன் இலாவான மலைச்சாரலில் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றபோது தன்னிலிருந்து உயிரோடு தொடர்புடைய இன்றியமையாத பொருள் ஒன்றை அந்த ஆணழகன் பறித்துக்கொண்டு போவது போன்ற ஓர் உணர்ச்சி விரிசிகைக்கு ஏற்பட்டது. அந்த மெல்லிய உணர்வின் காரணமோ, உள்ளர்த்தமோ விரிசிகைக்கு அப்போது தெளிவாகப் புலப்படவில்லை.