பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/386

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஒருத்தியை வரவேற்க முற்படுவோர்போலக் கோசாம்பி நகரத்து மக்கள், விரிசிகை என்னும் பேரழகியின் வரவை எதிர்பார்த்தனர் என்றே கூறலாம்.

72. விரிசிகை திருமணம்

விரிசிகையின் தந்தை, விரிசிகையை இலாவாண நகரிலிருந்து அனுப்புகின்ற நாளைக் குறித்து உதயணனுக்குச் செய்தி அனுப்பினார். உதயணன் அரண்மனையிலிருந்து விரிசிகையை அழைத்து வருவதற்கான சிவிகையையும் காவலர்களையும் சில பணிப் பெண்களையும் உடனே இலாவாண மலைக்கு அனுப்பினான். விரிசிகையைக் காண வேண்டுமென்ற ஆவல் நகர மக்களுக்கு மிகுதியாக இருத்தலை அறிந்து உதயணன் சில ஆணைகளை இட்டிருந்தான். ‘விரிசிகையைப் புற நகரத்திலுள்ள சோலை வரைக்கும் சிவிகையில் அழைத்து வரவேண்டும்’ என்றும் ‘அங்கிருந்து வழி நடையாகவே, நகர மக்கள் யாவரும் காணும்படி அவளை வீதிகளின் வழியாக அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும்’ என்றும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன. விரிசிகை நகரத்திற்குள் வருகின்றபோது அந்நகரத்து வீதிகளின் யானை, குதிரை முதலியவற்றின் போக்கு வரவு நீக்கப்பட வேண்டும் என்றும், வீதிகளைத் தூய்மை செய்து நறுமண மலர்களைப் பரப்பி வைக்க வேண்டும் என்றும் ஆணைகள் இடப்பெற்றிருந்தன. விரிசிகையை அழைத்து வருவதற்காக இலாவாணம் சென்றிருந்த அரண்மனைப் பணிப் பெண்கள், காவலர்கள், முதுமக்கள் முதலியோர்க்கும் இந்த ஏற்பாடுகள் முன்கூட்டியே அறிவிக்கப் பெற்றிருந்தன. விரிசிகை வழி நடையாகவே நகர வீதியில் உலா வருவாள் என்ற செய்தி கேட்டு, ‘அவளை எல்லாரும் நன்கு, கண் நிறையக் காணலாம்’ என்னும் ஆசையால் கோசாம்பி நகரின் பக்கத்துச் சிற்றுர், பேரூர்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூடலாயிற்று.