பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

இறுதியில் முனிவருடைய ஆசை தோற்றது! மனம் வென்றது ஆம். முனிவரும் அவருடைய தேவியும் இலாவாண மலையில் தங்கள் ஆசிரமத்திலேயே தங்கிவிட்டனர். அரண்மனையிலிருந்து வந்திருந்தவர்களும் ஆசிரமத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களுமே விரிசிகையை அழைத்துக் கொண்டு கோசாம்பிக்குச் சென்றனர். அங்கிருந்து புறப்படும்போது விரிசிகை பிரிவுச் சுமை பொறுக்கமுடியாமல் அழுதேவிட்டாள். இளமையிலிருந்து அன்றுவரை தாய் தந்தையரைப் பிரியாமல் வளர்ந்துவிட்ட அவளுக்கு, அன்று அங்கிருந்து செல்வது மிகப் பெரிய வேதனையைக் கொடுத்தது.

இயற்கையின் சகல சம்பத்துக்களாலும் செளபாக்கியங்களாலும் நிறைந்து விளங்கும் இலாவாண மலைச்சாரலிலிருக்கும் தந்தையின் அழகிய ஆசிரமத்தை விட்டுச் செல்வதற்கு மனம் கலங்கினாலும், வேறோர் ஆசை அவளைக் கோசாம்பி நகரத்தை நோக்கி அதிவேகமாக அழைத்துக் கொண்டிருந்தது. அந்தக் காதல் ஆசையின் தீராத தாபத்தை அவளால் விலக்க முடியவில்லை. அவள் ஒரு துறவிக்கு மகள்தான். ஆனால் அவளால் எந்தப் பாசங்களையும் துறக்க முடியவில்லை. கண்ணிர்த் திரை கண்களை மறைக்கத் தந்தையையும் தாயையும் வணங்கிவிட்டு, அந்த அழகு மயமான ஆசிரமத்தையும் நீலமணி முடிதரித்தது போல நெடிது விளங்கும் இலாவாண மலையின் சிகரங்களையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தபின், கோசாம்பி நகரப் பயணத்துக்காகச் சிவிகையில் ஏறினாள் விரிசிகை. அவள் உள்ளம் உவந்தது. கண்கள் நீர் சிந்தின. சிவிகை புறப்பட்டது. இலாவாண மலையிலிருந்து புறப்பட்ட விரிசிகை, கோசாம்பியின் புறநகரில் அமைந்திருந்த கோவில் தோட்டம் ஒன்றில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப் பெற்றாள். அரண்மனையைச் சேர்ந்த பணிப்பெண்களும் தவப் பள்ளியைச் சேர்ந்த மகளிரும் விரிசிகையை நகரத்திற்கு உள்ளே அழைத்துக்கொண்டு செல்லப் பெறுவதற்கு முன்பாகவே, தாங்கள் தங்கியிருந்த தோட்டத்திலேயே மங்கல நீராட்டி அலங்கரித்து விடுவதென்று முடிவு செய்தனர்.