பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழி கூறாப் பண்பு

37

பொறியை இழந்த மயக்குறு நல்லெழிற் புதுமரப் பாவை போலத் துயர் கூர்ந்து நடுக்க முற்றாள். தான் உதயணனையன்றி மற்றொருவனை மணக்கும்படியே நியதி விதித்திருக்குமானால் அதைத் தன் உயிரைக் கொடுத்தாவது அவள் தடுத்துக்கொள்ள விரும்பினாள். தன்னுடைய தந்தை தன்னை வேறோர் அரசனுக்கு மணமுடிக்க இசைவாரா என்பதைப் பற்றி நினைக்கும்போது, அவளால் பொறுக்கவே முடியவில்லை. தத்தையின் இணைவிழிகள் முத்தைப் படைத்தன. ஆம் துயர் கண்ணிர்த் துளிகளாகத் தோன்றின. கலகலவென வளைகள் இசைபாடும் கைகளை நெரித்தாள். முகத்தில் துயரின் சாயை மெல்லப்படர்ந்தது தெரிந்தது. துயர் சோர்வாக உருக்கொண்டது. ‘அணியும் கலிங்கத்தாற் சுருக்கிட்டுக்கொண்டு சாகவாவது செய்வேனே ஒழிய, மற்றொருவன் மாலை சூட இசையேன்’ என்ற துணிவு கொண்டாள் தத்தை. ‘மற்றவன் மாலை சூடுவதற்கு என் தந்தை ஒப்புவாராயின் என் எலும்புகள்தான் அவர் காணக் கிடைக்கும்’ என்று எண்ணி வருந்தினாள் தத்தை. துயரம் முன்பின் அறியாத இடத்தில் தோன்றினால், அது பயங்கர எண்ணங்களுக்கு அடிப்படை செய்யத் தவறுவதில்லை. தத்தையைப் பொறுத்த வரையில் அது உண்மையாயிற்று.

தத்தை துயரமடைவதைக் கண்டு, அவளுக்கு உதயணன் பாலுள்ள மெய்க் காதலைச் சாங்கியத் தாய் அறிந்து கொண்டாள். செவிலித் தாயாகிய தான் அவளைத் தேற்ற வேண்டிய கடமையையும் உணர்ந்தாள். தத்தையைத் தழுவிக்கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினாள். தத்தையின் கண்ணிரைத் துடைத்துவிட்டுச் செவிலி பேசினாள்; “உன் கருத்துக்கு மாறாகத் தந்தை உனக்கு மணம் புரியமாட்டார். நீ வீணே கவலைப்பட வேண்டா. அங்ஙனமின்றி நின் தந்தை மாறுபடின், உன் நற்றாயும் யானும் எவ்வாறேனும் முயன்று அதைத் தடுக்கத் தயங்கமாட்டோம்” என்று அவள் கூறிய தேற்றுரைகளும் தத்தையை ஆற்றவில்லை. வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை நன்றாக உணர்ந்து அனுபவித்த முது