பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/407

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதல்வன் பிறந்தான்

405

திரத்தைச் செய்ய இயலுமா?’ என்று தச்சனை வினாவினர். தச்சன் ஒரு மறுப்பும் சொல்லாமல் முகமலர்ச்சியோடு அதற்குச் சம்மதித்தான். அவன் சம்மதித்தவிதமும் அப்போது அவனிடம் தோன்றிய முகபாவமும் உதயணனுக்கு முழு நம்பிக்கையை ஊட்டுவனவாக இருந்தன. இயந்திரப் பொறி செய்வதற்கு ஏற்ற பொருள்களை அளித்து, வேலையை உடனிருந்து மேற்பார்வை செய்யுமாறு உருமண்ணுவாவைக் கேட்டுக் கொண்டான் உதயணன். வேலை தொடங்கி அதிகமான நாள்கள் கழியவில்லை. மிகுந்த திறமையும் சுறுசுறுப்பும் கொண்டு காரியத்தை நடத்தினான் தச்சன். அவர்கள் எதிர்பார்த்த காலத்திற்கு முன்பே இயந்திரம் முற்றுப் பெற்றுவிட்டது. வாசவதத்தை அதில் பறப்பதற்காக ஆசையோடு காத்திருந்தாள். உதயணன் அவளை அழைத்துச் சென்று வானிற் பறப்பதற்குரிய அந்த இயந்திரத்தைக் காண்பித்தான். இயந்திரத்தை வெள்ளோட்டம் விடுகிற பாவனையில் அப்போதே அதில் பறந்து செல்ல விருப்பமுற்றனர் தத்தையும் உதயணனும். மங்கை பங்கனாகச் சிவ பெருமானும் உமாதேவியாரும் ஒருங்கே ஓராசனத்தில் ஏறி அமர்ந்ததைப்போல உதயணனும், வாசவதத்தையும் பறக்கும் இயந்திரத்தில் ஏறியமர்ந்தனர்.

இயந்திரம். புறப்படுகின்ற நேரத்தில் உருமண்ணுவா, உதயணனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான். “அரசே! என் மனைவி, வயந்தகன் மனைவி, இடவகன் மனைவி ஆகியோரும் இப்போது கருவுற்றிருக்கின்றனர். அவர்களுக்கும் தங்கள் தேவியாருக்கு ஏற்பட்டிருப்பது போலவே வானிற்பறந்து பல இடங்களையும் காணவேண்டும் என்ற மயற்கை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. ஆகையால் அவர்களையும் இவ்வியந்திரத்தில் ஏற்றிக்கொண்டு செல்லத் தாங்கள் திருவுளம் பாலிக்கவேண்டும்.”

உருமண்ணுவாவின் இந்த வேண்டுகோளை உதயணன் மறுக்கவில்லை. ஆனால், “இயந்திரம் அவ்வளவு பேர்களைத் தாங்குமோ, தாங்காதோ தெரியவில்லையே?” என்று தச்சனை நோக்கி உதயணன் ஒரு சந்தேகத்தை வெளியிட்டான்.