பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/412

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

‘கோமுகன்’ என்றும் பெயர்கள் சூட்டப்பெற்றன. இப்புதல்வர்களுக்குரிய ஜாதகங்களும் ஏற்கெனவே உரிய காலத்தில் கணிக்கப் பெற்றிருந்தன. உதயணனால் அனுப்பப் பெற்ற தூதுவர், உஞ்சை நகரடைந்து உதயணனுக்கும் நண்பர்களுக்கும் ஆண் மக்கள் பிறந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். இந்த நல்ல செய்தியைக் கொணர்ந்தமைக்காகத் தூதுவர்களுக்குப் பெரும் பொருளும் பரிசில்களும் அளித்தான் பிரச்சோதனன்.

தனக்குப் பேரன் பிறந்ததற்கு அறிகுறியாகப் பிரச்சோதனன் நகரெங்கும் நன்றாக அலங்கரிக்குமாறு ஆணையிட்டான். யூகியைப் பாராட்டி, “உனக்கும் புதல்வன் பிறந்துள்ளமைக்காக நீ செய்ய வேண்டிய தானங்களைச் செய்க” என்று அதற்காக அவனிடம் தகுந்த பொருள்களை அளித்தான். வாசவதத்தைக்குப் புதல்வன் பிறந்துள்ள செய்தியை நகரெங்கும் முரசறைந்து தெரிவிக்க ஏற்பாடுகள் செய்தான். தனக்குப் பேரன் பிறந்ததை ஒரு பெரிய திருவிழாவாகக் கொண்டாடினான். யூகிக்கும் புதல்வன் பிறந்திருப்பதனாலும், உதயணன் அவனை விரைவில் அனுப்பச் சொல்லியிருப்பதாலும், அவன் மிக விரைவில் கோசாம்பி நகருக்குத் திரும்பிவிட நேரும் என்பதைப் புரிந்துகொண்ட பிரச்சோதனன், அவனுக்கும் தன்னுடைய அமைச்சன் சாலங்காயனுக்கும் உள்ள அறிவின் தராதரத்தை ஒரு தருக்கச் சொற்போர் நிகழ்ச்சி மூலமாக நிர்ணயித்துப் பார்த்துவிட விரும்பினான். இந்த எண்ணம் பிரச்சோதனனுடைய மனத்தில் வெகுநாளாக நிலைத்திருந்த எண்ணம். எனவே பூகி கோசாம்பிக்குப் புறப்படுவதற்கு முதல் நாள், யூகிக்கும் சாலங்காயனுக்கும் தன் அவையில் ஒரு தருக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் பிரச்சோதனன். அறிவுப் போராட்டமான அந்தத் தருக்கத்தில் ‘யாருக்கு வெற்றி’ என்று அறிவதில் பிரச்சோதனன் அவையில் யாவரும் ஆவல் காட்டினர்.

முன்பே தீர்மானித்தபடியே யூகி, சாலங்காயன் ஆகியோர்களின் தருக்கமிடும் திறமையை நிர்ணயிப்பதற்காக,