பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/422

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கோமுகனுடைய நட்பாலும் உதவிகளாலும் தங்களுக்குத் திருமணம் முடிந்தபின் மதனமஞ்சிகை, நரவாண தத்தன் வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் கழிந்து வந்த தென்று மேலே கூறப்பட்டது. பல நாள்கள் இவ்வாறே கழிந்துகொண்டிருந்தபோது, கோசாம்பி நகரத்து மக்கள் வழக்கமாகக் கொண்டாடும் பெரிய திருவிழா ஒன்றும் வந்து சேர்ந்தது. நகர மக்களும் அரண்மனையைச் சேர்ந்த மற்றவர்களும் இந்த விழாவைச் சிறந்த முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து வரலாயினர். தேவருலகத்தைச் சேர்ந்த விஞ்சையர்களும்கூட மகிழ்ச்சியுடனே இந்த விழாவில் வந்து கலந்து கொள்வதாக இதைச் சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

உரிய மங்கல நாளில் முன்பே செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளுடனே இந்த விழாவைக் கோசாம்பி நகரத்தினர் தொடங்கி நடத்தினர். நகரின் எப்பகுதியிலும் விழா ஆரவாரமும் வியப்புக்குரிய இனிய காட்சிகளும் புதுமையும் மலிந்து தோன்றின. வித்தியாதரர் உலகில் நூற்றுப் பத்து அரசர்களைத் தன் ஆணையின் கீழே கொண்டு ஆளும் மன்னனாகிய மானசவேகன் என்னும் விஞ்சையன், கோசாம்பி நகரத்தில் நிகழும் இந்த விழாவைக் கண்டு களிக்க ஆவல் கொண்டு, கரந்த உருவுடனே தோற்றம் மாறி வந்திருந்தான். கோசாம்பி நகரத்தின் தோற்றத்திற்கே தனிப்பட்டதோர் அழகைச் செய்யும் மாடகூட விமானங்களையும், அழகுமிக்க பரிய வீதிகளையும் சோலைகளையும் பூங்காக்களையும், மகிழ்ச்சியோடு பார்த்தவாறே, அவ்வழகிய நகரத்தின் பகுதிகளில் மனம் போனபடி சஞ்சரித்துக் கொண்டிருந்தான் அந்த விஞ்சையன்.

அப்போது விழா நாள்களில் ஒருநாள், மதன மஞ்சிகையோடு ஒரு பெரிய சோலைக்குச் சென்றான் நரவாண தத்தன். விழாக் காட்சிகளைப் பலவாறு அலைந்து கண்ட பின்பு பொழுதை இனிய சூழ்நிலையில் இன்பமாகக் கழிக்கலாம் என்றே அவர்கள் இருவரும் அந்தச் சோலைக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்களைப் பிரிப்பதற்கு விதி,