பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/432

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மீண்டும் வித்தியாதரருலகத்தை அடைந்து மனைவிமார்களுடனே அங்கேயே தங்கிச் சிறப்பாக அதனை ஆண்டு வந்தான். தேவருலகையும் ஆளச் செய்த புண்ணிய பலனைக் கண்டு அவனை மற்றவர்கள் வாழ்த்தினர். முதுமையடைந்து விட்ட பின்பும், தன் மகன் செய்த வெற்றி முழக்கத்தால் உதயணன் இப்போதுகூடப் பெருமிதமடைய முடிந்தது. தான் ஆருணியை வென்று வெற்றி முழக்கமிட்ட பழைய நிகழ்ச்சியைவிட, தன் மகன் இப்போது தேவருலகையே வென்ற வெற்றியில் பெரிதும் மகிழ்ந்தான் அவன். உதயணன் தனக்கு ஒப்பற்ற நண்பனான யூகி மந்திரியாக வாய்த்ததும், வாசவதத்தை மனைவியானதும், வித்தியாதர சக்கரவர்த்தியாக விளங்கும் நரவாண தத்தன் புதல்வனானதும், பிற நலங்களும் தவத்தின் பயனே! ஆதலால், ‘இனிமேல் தான் மேற்கொள்ளத் தக்க செயல் தவமே’ என்று துணிந்து அரச போகங்களாகிய செல்வத்தையும் பதவியையும் வெறுத்தான். அதனை அறிந்த அவன் தேவிமார், நீர் விளையாட்டு முதலியவற்றால் அவன் மனத்தை வேறுபடுத்தித் தம்மையே கருதித் தம் வயத்தினனாக அவன் மனத்தை ஒழுகச் செய்ய முயன்றனர்.

அவன் மனம் அந்த வழியிற் சில நாள்கள் சென்றது. பின்பு ஒரு நாள் உதயணனுடைய பட்டத்து யானை மதங்கொண்டு புறப்பட்டு நகரை அழிக்கத் தொடங்கி, யாருக்கும் அடங்காமற் பாகர்களையும் குத்துக்கோற்காரையும் பிளந்தெறிந்தது. அந்த யானையினால் நகரமே நடுங்கியது. அக்காலத்தில் அந்நகரை அடுத்த சோலை ஒன்றில் தவத்தால் சித்திபெற்ற சாரணர் பலர் வந்து தங்கினார்கள். அவர்களுக்குத் தலைவரான தருமவீரர் என்பவர் தம்மை அடைந்தவர்களுக்கு வழக்கப்படி அங்கே தருமோபதேசம் செய்து வருவாராயினர். அவ்வுபதேச மொழிகளை விலங்குகளும் பறவைகளும் கேட்பனவாய்த் தத்தம் செயல்களை மறந்து உணவொழிந்து தாம் செய்த பாவங்களை நினைந்து துன்புற்றவண்ணமாய் அடங்கி நின்றன. மேற்கூறிய பட்டத்து யானையும் இயல்பாகவே அங்கே வந்து