பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

 வியாபாரிகளுடன் வடதேசத்திற்குச் செல்லலானேன். வழியில் யான், தன் சீடர்களுடன் யாத்திரை செல்லும் சாங்கிய முனிவன் ஒருவனைச் சந்தித்தேன். அவனை அடிபணிந்து வணங்கிச் சாங்கிய மதத்திற் சேர்ந்து அவனோடு சென்றேன்.

நாளடைவில் சாங்கியமத உண்மைகளை அந்த முனிவரிடமிருந்து நன்கு கற்றறிந்து சமயவாதம் புரிவதில் தேர்ச்சியடைந்தேன். இமயமலையிலுள்ள சாங்கியர் ஆசிரமத்தில் இரண்டாண்டுகள் தங்கினேன். பின்னர் சாங்கிய முனிவர், தம் சீடர்களுடன் தெற்கே குமரியில் நீராடப் போந்தார். யானும் அவருடன் புறப்பட்டேன். இடையே இந்நகரத்தின்பாலுள்ள காள வனத்தைச் சார்ந்த ஒர் தவப் பள்ளியில் சில நாள்கள் தங்கினார். பிரச்சோதனனுடைய அவையிலுள்ள பல சமயவாதிகளை வென்று புகழ்க்கொடி நாட்டும் பேறு அப்போது என் ஆசிரியனுக்குக் கிட்டியது. மன்னன் என் ஆசிரியன்பாற் பெருமதிப்புக் கொண்டான். யானும் பிரச்சோதனனுடைய அரண்மனையில் நெருங்கிப் பழகினேன். அரசமாதேவி என்னை மிக்க அன்புடன் போற்றி, என்பால் அறங்கேட்க ஆவல் கொண்டாள். எனவே நான் இங்கேயே தங்கிவிட்டேன். ஆசிரியர் முதலியோர் குமரியாடச் சென்றுவிட்டனர். அரண்மனையில் நிலையாகத் தங்கி அரசமாதேவிக்கு அறநெறி விளக்கி வருங்கால், சிறுமியாக இருந்த வாசவதத்தை என்னைப் பெரு விருப்புடன் பார்த்து மகிழ்ச்சியாகப் பழகுவாள். பழக்கம் வளர்ச்சியடைய அடைய நற்றாய்க்கு அடுத்த நிலையிலிருந்து அவளை யான் காக்க வேண்டியதாயிற்று. அரசமாதேவியும் அவ்வாறே காக்குமாறு வேண்டிக் கொண்டாள். ஆகவே யான் தத்தையின் செவிலித் தாயானேன்." சாங்கியத் தாய் இவ்வாறு தன் வரலாற்றை உதயணனுக்குக் கூறி முடித்தாள்.

சாங்கியத் தாயின் வாழ்க்கைக் கதையில் தானும் பெருமைக்குரிய தொரு பங்கு பெற்றிருப்பதை அறிந்து உதயணனுக்கு அவளிடம் பேரன்பு உண்டாயிற்று. அவளை மதித்து வணங்கினான் அவன்.