பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10. கலை அரங்கேற்றம்

ரங்கேற்றத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் விரைவாக நடந்தன. தத்தையின் யாழரங்கேற்றம் மட்டுமல்ல; மன்ன குமரர் உதயணனிடம் கற்ற கலையரங்கேற்றமும் உடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் அரசிளங்குமரர் போர்த்துறைக் கலைகள், பின்னர் யாழிசை வித்தகி தத்தையின் தேனிசை விருந்து இவ்வாறு அரங்கேற்றம் முறை செய்யப்பட்டிருந்தது. அரசகுமரர் மேடைக்கு வந்தனர். பிரச்சோதனன் அரியணைமேல் அமர்ந்திருந்தான். அருகே உதயணன் ஆசிரியன் என்ற முறையில் வீற்றிருந்தான். அவைக் களம் அறிஞர்களால் நிறைந்திருந்தது. தாம் கற்ற பலவகை நுண்கலைகளையும் யானையேற்றம், குதிரையேற்றம், வாட்போர், விற்போர் முதலிய போர்களையும் அவையினர் மகிழ வெளிக்காட்டினர் அரசிளங்குமரர். அறிஞர் புகழ்ந்தனர். அவையோர் பாராட்டினர். உதயணன் தானே அவற்றுக்கு ஆசிரியனென்ற எண்ணத்தால் இறும்பூது அடைந்தான். பிரச்சோதனன் மனைவி தன் குமாரரை ஈன்ற பொழுதிலும் பெரிதுவந்தாள். அந்த உவகையில் வேறோர் வியப்பும் கலந்திருந்தது. ‘பகைவனாக இருந்து வந்த உதயனனல்லவா நம் புதல்வர்களைக் குலவிளக்காக்கி இருக்கிறான். என்னே அவன் பண்பு!’ என்பதுதான் அவளுடைய வியப்பு. அவையோர் அறியும்படி உதயணனை வாயாரப் புகழத் தொடங்கினான் பிரச்சோதன மன்னன். பாராட்டியும் பரிசு நல்கியும் நன்றி சொல்லிய பின்னர், மனம் விரும்பி உதயணனை விடுதலை செய்து அவன் நாட்டிற்கு அனுப்பி விடுவதாகத் தான் கருதியிருப்பதையும் தன் அவைக்குக் கூறினான் பிரச்சோதனன். உதயணனுக்கு அளவிடற்கரிய பல சிறப்புகள் செய்யப் பெற்றன. பிரச்சோதனன் அவை முடிந்ததும் அந்தப்புரத்திற்குச் சென்றான். அப்போது தத்தையின் கலையையும் இப்போதே அரங்கேற்றச் செய்யலாம் என்று உதயணன் ஒரு தூதுவன் மூலம் பிரச்சோதன