பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மன்னனுக்குக் கூறியனுப்பி யிருந்தான். அந்தத் தூதுவன் கூறிய செய்தியைக் கேட்டு, மன்னன் முன்னினும் மும் மடங்கு மகிழ்ச்சியுற்றான். அதோடு தத்தை யாழரங்கேற்றத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்யும்படி வினைவலார்க்கு ஆணையிட்டான். ஏற்பாடுகள் நடந்தன. வயிரியர், கூத்தர் முதலிய இசையோடு பட்ட பல் துறைக் கலைஞர்களும் பார்வையாளராக அழைக்கப் பெற்றனர். அரங்கில் எங்கும் அகிற்புகை மணம் எழும்பியது. அரங்கு எழில் நிலையமாக அலங்கரிக்கப் பெற்று விளங்கியது. மேடையை மறைத்து ஒரு மெல்லிய திரைச்சீலை தொங்கியது. அரங்கேற்றற்குரிய நாளில் அதற்கெனக் குறித்த போது கொண்டாட்டத்துடன் வந்து சேர்ந்தது. தத்தை ஆயமகளிர் புடைசூழ அழகுப் பாவையாக அரங்கினுட் புகுந்தாள். மன்னர் அவையின் நடு நாயகமாக விளங்கினார். அது மட்டுமல்ல. தத்தையின் தந்தை என்ற பாசமும் ஆவலுருவாக அவரிடம் விளங்கியது. அவைக்களம் கலைக் களமாகப் பொலிந்தது. அரசன் பக்கலில் அமைதியே வடிவாக அமர்ந்து கொண்டிருந்தான் வத்தவர் கோனாகிய உதயணன். திரை விலக்கப் பெற்றது. தெய்வமொன்று கையில் யாழேந்தினாற் போலக் கலைமகளோவெனக் கண்டார் ஐயுறும் வண்ணம் காட்சியளித்தாள் வாசவதத்தை, சாங்கியத் தாய், “தந்தையாகிய பிரச்சோதனனை வணங்கி விட்டு யாழ்கற்ற திறனைப் பின்னர் வெளிக் காட்டுமாறு” தத்தையிடம் கூறினாள். அவ்வாறே தத்தை தந்தையை வணங்கி யாழ் நரம்புகளை மீட்ட ஆரம்பித்தாள். நால்வகைப் பண்ணும் எழுவகைப் பாலையும் நன்கறிந்த கலைநலங் கண்டு கலைத்துறை வாணரெல்லாரும் வியந்தனர். மூவேழ் திறமும் முற்ற விளங்கியது அவள் நல்லிசை. அவை முழுவதும், அந்த இசை நலத்தில் மயங்கியது. ‘தத்தை தெய்வகன்னி’ என்றார் சிலர். ‘இன்னிசைச் செல்வியாகிய மாதங்கி இவளே’ என்றார் பலர் பாராட்டுபவர் பலரானால், பாராட்டுகின்ற முறையும் பலவாகத்தானே இருக்கும்? வேறு