பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

 கலைப் பொருள்களும் நூலாக் கலிங்கமும் தந்தப் பேழையும் யந்திரப் பொறிகளும் வேண்டிய மட்டும் அளித்தான். ‘கைது செய்த உதயணனுக்கு இந்நிலையா என அவை வியந்து விடுமோ?’ என்று பிரச்சோதனனுக்கு ஐயம். அதை வெளிப்படையாகப் போக்க நினைத்து, “அவையோர்களே! முன்பு யான் இதே உதயணனைப் பல வகையிலும் துன்புறுத்த நினைத்தேன். இன்றோ பலவகையிலும் இவனுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். ஒருவருடைய நலன்களைப் புரிந்துகொண்டபின் மனம்மாறி நன்மை செய்வது முரண்பாடு அன்று” என்று தன் செயல்களுக்கு விளக்கம் கூறினான். உதயணனை விடுதலை செய்து தக்க சிறப்புக்களுடன் வத்தவ நாட்டிற்கு அரசனாக அனுப்பிவிடக் கருதினான் மன்னன். அதற்கு ஆவனவற்றை விரைவில் செய்யவும் தொடங்கினான். உதயணன் விடுதலை பெற்று ஊர் திரும்ப வேண்டிய நல்ல நாள் நெருங்கி வந்தது. அரசன் இவ்வாறு உதயணனை நகரனுப்ப ஏற்பாடு செய்துவந்ததைத் தன்னுடைய ஒற்றர் மூலம் யூகி அறிந்துகொண்டான். பிரச்சோதனன் ஏற்பாட்டின் படி உதயணன் கௌசாம்பி திரும்பி விடுவானாயின் யூகியின் சபதம் பொய்யாகிப் போகும். தன் சபதத்தை மெய்யாக்க வேண்டிய தருணத்தில் இத்தகைய இடையூறு வந்து சேர்ந்ததை யூகியாற் பொறுக்க முடியவில்லை. எப்படியும் சபதம் நிறைவேறியாக வேண்டும். யூகியின் மூளை வேகமாக் வேலை செய்தது. முடிவில் ஒரு சூழ்ச்சித் திட்டம் தோன்றி விட்டது. யூகி தனக்கு வேண்டியவளான பாகீரதி என்னும் பெண்ணைத் தெய்வாவேசம் கொண்டவள்போல் வேடமுறச் செய்து, நீர்விழாக் கொண்டாடும் படியாக நகர மக்களைத் தூண்டும்படி அனுப்பினான். கரிய உடையணிந்து பிளந்த வாயுடன் பைத்தியம் கொண்டவள்போல் சிரித்தும் பேசியும் ஆடியும் பாடியும் நகர வீதிகளில் திரிந்துகொண்டே நீர்விழாக் கொண்டாடும்படி மக்களை வற்புறுத்திப் பயமுறுத்தினாள் பாகீரதி. “யான் முன்னர் நளகிரியை மதங்கொள்ளச் செய்த தெய்வம். சென்ற ஆண்டும் நீராட்டு விழா நிகழவில்லை. இந்த ஆண்டும் நீராட்டுவிழா நிகழாதாயின் யான் மீண்டும்