பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உவகைத் திருவிழா

51

 நீராடுவிழாவிற்காக வந்த மக்கள் மணற் பரப்பிலே தத்தம் இருக்கைகளைச் சமைத்துக் கொண்டனர். பந்தரும் படப்பும் கலிங்கம் தோய்ந்த காசு பொதி சிற்றில்களும் சமைக்கப் பெற்றன. அந்த அவசரத் தேவையை உத்தேசித் தெழுந்த வீடுகளிலும் அவர்களுடைய அலங்காரக் கலையின் நுண்ணிய திறன் தோற்றியது. நதிக்கரையை ஒட்டி நீரிலே பாய்ந்து விளையாடுதற்கு உரிய நீர்மாடங்களை அமைத்தனர். ஆற்றைச்சூழ எங்கும் விழாக்கோளாளர் மொய்த்துச் சூழ்ந்தனர். நீராட்டுவிழா மன்னவன் பணியை எதிர்நோக்கிக் காத்திருந்தது. நல்ல நாளிலே எல்லோரும் ஒன்றுகூடி நல்லதைப் பகுத்துக்கொண்டு மகிழ்வது நம்மவர்களுடைய தலை சிறந்த பண்பாடு. இதை நன்குணர்ந்த பிரச்சோதனன், எத்தகைய குற்றம் செய்தவர்களாயினும் இவ்விழா மகிழ்ச்சியிற் பங்குகொள்ள வேண்டும் என்று அறிவிக்கச் செய்தான்.

இவ்வாறு முரசெறி வள்ளுவ முதுமகன் அரசுரை ஆணையை நகரறியப் பரப்பினான். விழா நிகழும் இருபத்தொரு நாளும் மெய்காவலர்களன்றிப் பிறபடைகளை நீக்கித் தனியனாக இருப்பான் மன்னவன். அழகிற் சிறந்த பெண் யானை ஒன்றின் மேலேறிப் பிரச்சோதன மன்னன் விழாவிற்குப் புறப்பட்டான். அரச மாதேவி முதலியோர் யானைத் தந்தங்களால் இயற்றப் பெற்று வலிய எருதுகள் பூட்டிய பாண்டியங்களில் சென்றனர். நீராட்டிற்கு வேண்டிய பல வகைப் பொருள்களையும் அரசமாதேவியருக்குரிய குற்றிள மகளிர் பின்னே கொண்டு சென்றனர். சேனாபதி மகளைத் தத்தை அலங்கரித்தாள். காஞ்சனமாலை தத்தையை அலங்கரித்து நீராட்டிற்குப் புறப்பட ஏற்பாடு செய்தாள். தத்தை ஒரு வையப் பண்டியில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டாள். வண்டி புறப்படும்போது காளைகளின் குளம்பு வழுக்கவே பாகன் அவ் வண்டியை நீக்கிவிட்டு மல்லர் தூக்கும் மாடச் சிவிகை ஒன்றில் அவளை ஏற்றினன். தத்தை ஆயமகளிர் சூழ விழாவிற்குப் புறப்பட்டாள். இதற்குள் சிவேதன் மூலமாகப் ‘பத்திராபதி’ என்ற இலக்கணக் குறைவில்லாத பெண்