பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

களாகவும் இருக்கலாம். எதற்கும் நீ என்னுடன் ஆயுத பாணியாகப் பிடியின்மேல் வருவது நல்லது” என்றான். உதயணன் கூறியவற்றை உண்மை என்று நம்பிய வராகன் பிடி மீதேறுவதற்காகத் தன் வில்லையும் அம்பையும் உதயணனிடம் கொடுத்துவிட்டு நெருங்கினான். வில்லும் அம்பும் தன் கைக்கு வரப்பெற்ற உதயணன், ‘இனி இவனாற் பயமில்லை!’ என்று ஏறவந்த வராகனுக்கு இடங்கொடாமற் பிடியை வேகமாகச் செலுத்திக் கொண்டு போய்விட்டான். ஏறுதற்கு நெருங்கி இடறிவீழ்த்தப்பட்ட வராகனும் வீரர்கள் சிலரும் உதயணன் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டனர். அவந்தியர் வேந்தனாகிய பிரச்சோதனன் திரு முன்னர்ப்போய் யாது கூறுவது என்றஞ்சி மயங்கினர். இருபடைக்கும் இடையே போர் நடந்தது. கொற்றவன் ஆணை தப்பிய கொடுமைக்கு மிகவும் வெருவிய அவந்தி வீரர் ஒன்றுகூடி, உதயணன் செல்லும் பிடியைப் பின்பற்றி ஓடினர். அவ்வாறு ஒடினவர்களை வத்தவநாட்டு வித்தக வீரர், வாள் கொண்டு எதிர்த்தனர். ‘வத்தவன் வழிப்பட்டனள் தத்தை என்ற செய்தியை மன்னன் அறியின் என் செய்வானோ?’ என நடுங்கிய வீரர், இப் போரில் உயிரே போயினும் கவலை இல்லை எனத் துணிந்து முன் வந்தனர். முன்னேற்பாட்டுடன் அங்கங்கே ஒளிந்திருந்த யூகியின் வீரர்கள் ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர் வெளிவந்து பிரச்சோதனன் ஆட்களோடு போரிட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. யூகியின் படையினர் வீசிய வாள்களில் பகைவர் சிரங்கள் பனங்கனிக் குலையிலிருந்து உதிர்வதுபோல உதிர்ந்தன. குருதி வெள்ளம் ஆறெனப் பரந்தது. அப்போது யூகி தன் வாளுடன் அங்கே தோன்றி உதயணனைச் சந்தித்தான். பிடிமீது விரைவாகச் சென்று கொண்டிருந்த உதயணன் பிடியை நிறுத்தி யூகியை வரவேற்றான். உதயணனுக்கு இறுதிவரை வெற்றியை அளிக்குமாறு அவன் ஏறிக் கொண்டிருந்த யானையாகிய பத்திராபதியை வாழ்த்தினான் யூகி. நண்பர்கள் மேலே நடக்க வேண்டிய