பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

காணப்போகுமுன் முரசறையும் வள்ளுவனைக் கூப்பிடச் செய்து மழைப்பொழுதாகவும் பனிபொருந்தியதாயும் உள்ள இம் மாலையில் தீர்த்தத் துறையிலிருந்து நகர் செல்ல வேண்டாவென மக்கள் யாவர்க்கும் முரசறைத்து அறிவிக்கவும், காலையில் நகர் போகவேண்டுமென்று பணிக்கவும் செய்யுமாறு கூறிச் சென்றான். சென்றவன் நேரே திருமா தேவியின் சிங்காரப் பள்ளியறையுள் நுழைந்தான். நீர்த் துறையில் அரசன் விடுதிக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த அச்சிங்கார மாளிகை பலவகை அணிகளுங்கொண்டு பார்ப்போர்க்குக் கவின் கொடுத்து விளங்கியது. மன்னன் வரவறிந்து எதிர்கொள்ள வந்த பெருந்தேவியின் மனமோ, கலவரமும் திருப்தியும் கலந்து ஒரு நிலையில் நில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. உதயணனே காப்பாற்றுவதனால், தன் மகள் தத்தைக்குத் தீது நேராது என்ற திருப்தி இருந்தது. ஆனால் உதயணன் தத்தையைத் தன் நாடு கொண்டு ஏகுவான் என்ற நினைவே கனவில் கூடத் தேவிக்கு இல்லை.

பலவித எண்ணங்களுடன் தேவி மன்னனை வரவேற்றாள். உணவு முடிந்தபின் வந்த செய்தியை விரிவாகக் கூறக் கருதினான் பிரச்சோதனன். அன்று உணவே வேண்டியிருக்கவில்லை மன்னனுக்கு. இருந்தாலும் தான் உண்ண மறுத்தால் திருமா தேவி ஐயுற நேரும் என்பதற்காக ஏதோ ஒருவாறு உணவை முடித்தான். இருவரும் பள்ளி மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். சிந்தனையைப் பொறுத்த வரையில் இருவருக்கும் ஒன்றும் புரியாத கலவரமொன்று உள்ளே குழம்பிக் கொண்டிருந்தது. தான் சொல்ல வந்ததைப் பக்குவமின்றி எடுத்த எடுப்பில், ‘உதயணன் தத்தையைக் கொண்டு ஓடிவிட்டான்’ என்று கூறிவிட்டால் தேவிக்கு என்ன நேருமோ என்று அஞ்சிய மன்னன் மிகவும் நயமான ஒரு வழியைப் பின்பற்றி அதை அவளுக்குக் கூற முடிவு செய்தான். “தத்தையை உதயணன் மணப்பது பற்றித் தேவியின் கருத்து யாது?” என முன்பின் தொடர்பில்லாத ஒரு கேள்வியைத் திடீரென அவளிடம் கேட்டான் அரசன்.