பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெற்றி முழக்கம்


1. மாய யானை

சதானிகன் கௌசாம்பி நகரத்து அரசன். வைசாலி நகரத்து அரசனாகிய சேடக ராசனின் புதல்வி மிருகாபதியைச் சதானிகன் மணம் புரிந்துகொண்டான். மகளுக்கு மணம் முடித்துக் கொடுத்ததிலிருந்தே சேடக ராசனுக்கு மறக்கள வேள்வியில் மனம் விருப்புக்குன்றி, அறக்கள வேள்வியில் ஆர்வம் கொண்டது. என்றும் நிலைக்கப் போகிற உண்மை, நிலையாமை ஒன்றுதான் என்பது அவன் நினைவுகளில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. அரண்மனை மேல் மாடத்தில் நின்று மேகங்கள் தவழும் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே உலாவிய மாலை நேரமொன்றில் அந்த மேகங்கள் நிலையின்றிக் கூடுவதையும், கலைவதையும் எண்ணி அவற்றைத் தன்னோடு ஒப்பிட்டுக் கொண்டான் சேடக ராசன். இப்படி எதைப் பார்த்தாலும் எதைச் சிந்தித்தாலும் அதிலிருந்து நிலையாமையே அவனுக்குத் தோன்றியது. கடைசியில் ஒரு நாள், அவனுடைய மனமும் உணர்வுகளும் காம்பிலிருந்து பிரியும் வெள்ளரிப் பழம் போலப் பற்றுக்களிலிருந்து கழன்றன. தன் மகளுக்குத் திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் மன்னர் மன்னனான சேடக ராசனுக்கு வாழ்க்கையின் இந்த நிலையாமை புலனாகியதனால் அவன் உள்ளம் துறவை நாடிற்று. தன் புதல்வர் பதின்மரையும் அழைத்து, ஒவ்வொருவருக்கும் தன் விருப்பத்தைக் கூறி, வைசாலி நகர ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி சேடக ராசன் வேண்டினான். அவர்களுள் ஒன்பது புதல்வர்கள், தாமும் அவனைப் போலவே துறவு நாடுதலைக் கூறி ஆட்சியை மேற்கொள்ள