பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேகத்தில் விளைந்த சோகம்

73

பெறக் காட்சி தரும் தாமரைச் செம்மலரில் தீயை வளர்ப்பதற்குச் செய்யும் ஆகுதி போலப் பொழிந்தது. இடமகன்ற சோலைகளிலே வெள்ளிக் கும்பமெனக் குலைதள்ளிய பாளைக் கமுகும், பச்செனப் பருத்த மூங்கிலும், பழுத்த கதலி மரங்களும், கொத்துத் கொத்தாகக் குலை தள்ளிய தென்னை மரக் கூட்டமும், இனிய தீம் பலாவும், தே மாமரங்களும், புன்னையும், செவந்தியும், பொன்னென இணர்த்த பூங்குவை ஞாழலும், இன்னும் பலபல மரங்கொடி செடிகளின் ஈட்டமும் கலந்த தோற்றம் எழுமையும் நுகர அரிய இன்பக் காட்சியாக விளங்கின. பகற்போதிலே கதிரவன் கிரணங்களும் உள்நுழைய இயலாத செறிவு பொருந்தி இருண்டவை, அச்சோலைகள். கழனிகள் தோறும் முற்றிச் சாய்ந்திருந்த விளை நெற்கதிர்கள் காற்றோடு அசைந்தாடின. அங்கங்கே உழவர் கூட்டம் செய்யும் ஆரவாரமும், களங்களில் நெல்லடிப்போர் செய்யும் களிச் செயல்களும் காட்சியளித்தன. வேளாள மகளிர் வளர்க்கும் இல்லுறை கிளிகளின் மழலைச் சொல்விருந்து ஒருபுறம்; தண்ணுமையும் தடாரியுமாக முழவுடன் முழக்கும் ஆடவர் நாதவெள்ளம் ஒருபுறம், களை கட்டும் கடைசியர்கள் வரிப் பாடல் பாடும் இசை விருந்து இன்னொரு புறம். இத்தகைய மருத நிலப் பெருவழியில் பத்திராபதி உதயணன் முதலியோரைச் சுமந்து விரைவாகச் சென்று கொண்டிருந்தது.

அவர்கள் அப்போது அருட்ட நகரத்தை அணுகிக் கொண்டிருந்தனர். எதிரே பெரிய கோட்டை கொத்தளங்களும், வானளாவிய கொடி மதில்களுமாகத் தெரிந்த அருட்ட நகரத்தின் புறக்காட்சி ஒரு தனி அழகுடன் விளங்கியது. தான் செல்வது அக்கம் பக்கத்திலுள்ளோர் அறிதற்கு அந்த இரவில் ஏதுவாகிவிடக் கூடாது என்பதற்காக அருட்ட நகரத்தை அணுகும்போது, பத்திராபதி அணிந்திருந்த மணியை ஒலிக்காதபடி செய்து நீக்கினான் உதயணன். தத்தையும் காஞ்சனையும் அணிந்திருந்த கிண்கிணிச் சிலம்புகளின் கீத ஒலியைக் கூடத் தடுக்குமாறு கூறினான். இருள் நேரமாகையால் ஏனையோர் ஐயுற நேரும். அதனால் யாது விளையினும்